137 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜனவரி 17) முல்தானில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்திருந்தது. சௌத் ஷகீல் 56 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
பாகிஸ்தான் - 230/10
பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்ட சௌத் ஷகீல் - முகமது ரிஸ்வான் இணை இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. சௌத் ஷகீல் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். முகமது ரிஸ்வான் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 230 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: அணியில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜோமெல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். கெவின் சின்க்ளேர் 2 விக்கெட்டுகளையும், குடகேஷ் மோட்டி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
137 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்
பாகிஸ்தான் அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி தொடக்கம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்வரிசை வீரர்கள் மட்டுமே ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து, சற்று ஸ்கோரை உயர்த்தினர். பாகிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக ஜோமெல் வாரிக்கன் 31 ரன்களும், ஜேடன் சீல்ஸ் 22 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சாஜித் கான் 4 விக்கெட்டுகளையும், அப்ரார் அகமது ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: "அருமையான அணி...” பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை பிசிசிஐ-க்கு பாராட்டு!
202 ரன்கள் முன்னிலை
மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 93 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் 11 ரன்களில் ஆட்டமிழந்த கேப்டன் ஷான் மசூத், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்தார். அவர் 70 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகமது ஹுரைரா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்துள்ளது. கம்ரான் குலாம் 9 ரன்களுடனும், சௌத் ஷகீல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இதையும் படிக்க: ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை உறுதிப்படுத்திய ரோஹித் சர்மா!
பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 202 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.