போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!
லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் நூற்றுக்கணக்கான முறை மீறி வருவதாகவும், தங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில், தெற்கில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள், ஆக்கிரமிப்பு ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் ஆண்டோனியோ கட்டேரஸ் லெபனானுக்கு வியாழனன்று (ஜன. 16) சென்றார்.
அங்கு நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கட்டேரஸ், “ஹிஸ்புல்லா அல்லது மற்ற ஆயுதக் குழுக்களுக்குச் சொந்தமான 100 ஆயுதக் களஞ்சியங்களை ஐ.நா. அமைதிப்படையினர் கண்டுபிடுத்துள்ளனர்” என்றார்.
இதையும் படிக்க |
இது தொடர்பாகப் பேசிய ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம், “லெபனான் அரசு மீறல்களை எதிர்கொள்வதில் உறுதியாக இருக்கவேண்டும். தற்போது, 100-க்கும் மேற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடரக் கூடாது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவு இருப்பதால் லெபனான் அரசுக்கு வாய்ப்பு கொடுத்து நாங்கள் இந்த மீறல்களைப் பொறுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்” என அவர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐநா செயலாளர் லெபனானின் புதிய அதிபர் ஜோசப் அவுனை சந்தித்தப் பின்னர் ஹிஸ்புல்லா தலைவர் காசிம் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 27 அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல், ஹிஸ்பொல்லா இடையிலான போர் முடிவுக்கு வந்தது. தெற்கு லெபனானில்இஸ்ரேல் இராணுவம் வெளியேறி லெபனான் ராணுவம் 60 நாட்களில் ஐ.நா. அமைதிப்படையுடன் இணைந்து அங்கு அடுத்தக்கட்ட பணிகளில் ஈடுபடவேண்டும். அதே நேரத்தில், ஹிஸ்புல்லா அமைப்பினர் தனது படைகளை லிட்டானி நதியின் வடக்கு எல்லையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிற்கு பின்வாங்க வேண்டும். மேலும், தெற்கில் உள்ள மீதமுள்ள ராணுவ கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இஸ்ரேலுடனான போரிற்குப் பின்னர் ஹிஸ்புல்லா அமைப்பு வலுவிழந்ததால் பாதிக்கப்பட்ட அரசியல் தரப்பு அவுனை அதிபராகத் தேர்ந்தெடுத்ததாகவும், இதனைத் தொடர்ந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நவாஸ் சலாம் பிரதமராக அவரது ஆதரவில் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று லெபனான் சென்றிருந்த பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.