டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?
அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால், அதிபர் பதவியேற்பு விழாவை பொதுவெளியில் நடத்த இயலாது என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமையில் அதிபராக பதவியேற்கவுள்ளார். பொதுவாக, அதிபர் பதவியேற்பு விழா அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டப்பேரவைக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும்; ஆனால், அமெரிக்காவில் தற்போது நிலவும் கடும் குளிர் காரணமாக பதவியேற்பு விழா பொதுவெளியில் நடத்தப் போவதில்லை என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது, ``ஆர்க்டிக் வெடிப்பால் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குளிரால் மக்கள் பாதிப்படைவதைக் காண்பதில் விருப்பமில்லை. அதிபர் பதவியேற்பு விழாவை, திரையில் காண கேபிடல் ஒன் அரினா மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க:பொங்கல் பண்டிகை: மது விற்பனையில் முதலிடத்தை நழுவவிட்ட மதுரை!
அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக அதிபர் பதவியேற்பு விழா மூடிய திடலுக்குள் நடத்தப்படவுள்ளது. 1985 ஆம் ஆண்டில், முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் பதவியேற்பின்போது, வெப்பநிலை மைனஸ் 23 முதல் மைனஸ் 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்தது. இதனையடுத்து, ரீகனின் பதவியேற்பு விழாவும், இவ்வாறே மூடப்பட்ட திடலுக்குள் நடத்தப்பட்டது.
இதேபோல், டிரம்ப் பதவியேற்கும் திங்கள்கிழமையிலும் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 9-ஆவது அதிபர் வில்லியம் ஹாரிசன் 1841 ஆம் ஆண்டில் பதவியேற்றபோது, குளிர் காற்று வீசிய நேரத்தில் பொதுவெளியில் பதவியேற்பு விழா நடத்தினார். ஆனால், பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே நிமோனியாவில் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார்.
நிமோனியாவால் பாதிக்கப்பட்டாலும், குளிர் காற்றில் அதிக நேரம் இருந்ததால்தான், நிமோனியா பாதித்ததாக இன்றளவிலும் கூறுகின்றனர். மேலும், ஹாரிசன் அமெரிக்க வரலாற்றில் குறுகியகால அதிபராக இருந்தவர்.
டிரம்ப்பின் பதவியேற்பு விழாவை மைதானத்திற்குள் நடத்தத் திட்டமிட்டிருப்பதால், பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான மைல்கள் தாண்டி வந்து, டிரம்ப்பை திரையில் காண்பதற்காக அல்ல என்று பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
பராக் ஒபாமா 2009-ல் அதிபராகப் பதவியேற்றபோது, திரண்ட கூட்டத்தைவிட, 2017-ல் டிரம்ப்பின் பதவியேற்பு விழாவின் கூட்டம் குறைவாக இருந்ததால், டிரம்ப் மிகவும் ஏமாற்றத்துடன் காணப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இருப்பினும், தற்போது நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவைக் காண மைதானத்தில் அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், சுமார் 2.5 லட்சம் பேர்வரையில் வருகை தரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.