டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு முகேஷ் அம்பானி தம்பதிக்கு அழைப்பு!
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜன. 20 (திங்கள்கிழமை) டொனால்ட் டிரம்ப் அதிபராக பதவியேற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் நிலையில், இந்தியாவில் பிரபல தொழிலதிபரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்று(ஜன. 18) அம்பானி, அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு!
மேலும் பதவியேற்பு விழாவுக்கு முன் டிரம்ப் மற்றும் துணை அதிபராக தேர்வாகியுள்ள ஜே.டி. வான்ஸ் ஆகியோர் அளிக்கும் இரவு விருந்திலும் அம்பானி தம்பதி கலந்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டோரும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கின்றனர்.
அதிபர் பதவியேற்பு விழா பொதுவாக, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டப்பேரவைக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும் சூழ்நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக மைதானத்தில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.