ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்.. இலவச மின்சாரம், குடிநீர்.. வாடகைதாரர்களுக்கும்!
தலைநகர் தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம், குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என தலைநகரில் மும்முனை போட்டி நிலவி வருகின்றது. இதையடுத்து வாடகைதாரர்களுக்கும் இலவச மின்சாரம் குடிநீர் குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் கேஜரிவால் பேசினார்.
தில்லி முழுவதும் வாடகைதாரர்களுகள் எழுப்பிய கவலைகளை எடுத்துரைத்தார். நான் எங்கு சென்றாலும், வாடகை வீட்டில் வசிப்பவர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் நல்ல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளால் பயனடைகிறார்கள். ஆனால் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் திட்டங்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த பிரச்னைக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்த கேஜரிவால், "தேர்தலுக்குப் பிறகு, பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த வாடகைதாரர்கள், இலவச மின்சாரம் . குடிநீர் ஆகியவை பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம். என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க விரும்பும் ஆம் ஆத்மி தனது பிரசாரத்தை அதன் நலன் சார்ந்த முன்முயற்சிகளைச் சுற்றிக் கட்டமைத்துள்ளது, இலவசப் பயன்பாடுகள் மற்றும் மேம்பட்ட பொதுச் சேவைகளை அதன் முக்கிய பலங்களாக முன்வைக்கிறது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.