கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. நீதி கேட்டு மேற்குவங்க மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் எல்லாம் நடத்தினர்.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் 64, 66 மற்றும் 103 (1) பிரிவின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிபதியிடம் பேசியபோது, "நான் பொய்யாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன். நான் இதைச் செய்யவில்லை. இதில் ஒரு ஐ.பி.எஸ். சம்பந்தப்பட்டுள்ளார்" என்று கூறியிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வழக்கில் தண்டனை விவரங்கள் வரும் திங்கள் கிழமை வெளியாகும்.