"போலீஸ் கண் முன்னாடியே வெட்டி கொன்னுட்டாங்களே..." - பெரம்பலூரை உலுக்கிய படுகொலை சம்பவம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 30). இருவரும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைத்திருக்கும் நெல் அறுவடை இயந்திரத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக, கை.களத்தூர் காவல் நிலையத்தில் தேவேந்திரன் மீது மணிகண்டன் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் தலைமைக் காவலர் ஸ்ரீதர், ஊர்க்காவல் படை வீரர் பிரபு ஆகியோர் இரு தரப்பினரிடையே சமாதானம் செய்ய முடிவு செய்து, மணிகண்டனை அழைத்துக் கொண்டு, கை.களத்தூர் காந்தி நகர் பகுதியில் உள்ள நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் அருணின் வயலுக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த தேவேந்திரன், போலீஸாருடன் வந்த மணிகண்டனை மறித்து, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், தேவேந்திரனைப் பிடித்து கை.களத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும், பலத்த காயமடைந்த மணிகண்டனை மீட்ட போலீஸார், அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக, அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால், ஆவேசமான அவரது உறவினர்கள், 'போலீஸார் கண் முன்னாடியே இப்படி வெட்டிக் கொன்னுட்டாங்களே’ என்று கதறினர். அதோடு, மணிகண்டன் உடலை கை.களத்தூர் காவல் நிலையத்தின் முன் வைத்து, நீதி கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சிலர் காவல் நிலையம் மீது கல் வீசித் தாக்கினர். இதில், காவல் நிலையத்தின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தாகச் சொல்லப்படுகிறது. அதோடு, மணிகண்டனைக் கொலை செய்த தேவேந்திரனைத் தங்கள் வசம் ஒப்படைக்கும்படி வலியுறுத்தினர். இதனால், காவல் நிலையம் பூட்டப்பட்டு, அங்குப் பாதுகாப்புக்காகக் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்த திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார், பெரம்பலூர் எஸ்.பி. ஆதர்ஷ் பசேரா உள்ளிட்டோர் அங்குச் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
"சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம்... கொலை செய்யப்பட்ட மணிகண்டன் வீட்டாருக்கு நிதியுதவி, அரசு வேலை உள்ளிட்டவைக் கிடைக்க வழிவகை செய்கிறோம்" என்று வாக்குறுதி கொடுத்தனர். அதனால், மூன்றரை மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முன்விரோதத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.