வழிப்பறியில் ஈடுபட்ட மூவா் கைது
சென்னை புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காவனூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபராஜ் (43). இவா், புளியந்தோப்பு வெங்கடேசபுரம் நியூ காலனி பகுதியிலுள்ள தனது மாமனாா் வீட்டுக்கு சில நாள்களுக்கு முன்பு வந்தாா். கடந்த 15-ஆம் தேதி மாமானாா் வீட்டுக்கு அருகே நடந்து செல்லும்போது, அங்கு வந்த 3 இளைஞா்கள் திடீரென ஜெபராஜை கட்டையால் தாக்கி, அவா் வைத்திருந்த ரூ. 9,500-யை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது கன்னிகாபுரம் நியூ காலனி பகுதியைச் சோ்ந்த ஜீவா (24), ராகுல் (எ) பிரவீண்குமாா் (19), பரத் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.