கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
Rahul Tiky: "என்னைப் போல் கவலையில் இருப்பவர்களைச் சிரிக்க வைத்தேன்" - விபத்தில் இறந்த ராகுல் யார்?
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் 27 வயது இன்ஸ்டாகிராம் பிரபலம் ராகுல். இவர் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இது அவருடைய ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'Rahul Tiky' என்னும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஐடியில் காமெடி வீடியோக்கள், உதவி செய்யும் வீடியோக்கள் போன்றவற்றை வெளியிட்டு சோசியல் மீடியாகளில் பிரபலமானார் ராகுல்.
கடந்த ஜனவரி 16 ஆம் தேதி, இரவு 10:30 மணிக்குக் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தப்பாடி பகுதியில், தன்னுடைய மாமியார் வீட்டிற்கு பைக்கில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்த போலீசார் விசாரணையில், "ராகுலின் பைக் கட்டுப்பாட்டை இழந்து கவுந்தப்பாடி பாலத்தின் பக்கவாட்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் ஹெல்மெட் அணியாததால் தலையில் அடிப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது" என்றனர்.
நகைச்சுவை மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் சோசியல் மீடியாவில் தன் பயணத்தைத் தொடங்கியவர் இவர். இப்போது இவருக்கு இன்ஸ்டாகிராமில் 8.19 லட்சம் ஃபாலோவர்களும், யூடியூப்பில் 70 ஆயிரம் சப்ஸ்கிரைபர்களும் உள்ளனர்.
இவருடைய வீடியோக்கள் ஒவ்வொன்றும் தனி ரகம். இவரது வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. காமெடி வீடியோக்களுக்கு இடையிடையே உதவி செய்யும் வீடியோக்களை வெளியிட்டும் லைக்ஸ் மற்றும் ஃபாலோயர்களை அள்ளி வந்தார்.
சமீபத்தில் ஒரு இன்ஸ்டா பிரபலம் போன்று இவர் நடித்துக் கட்டியிருந்த வீடியோ 11 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "சின்ன வயசுலேயே அப்பா எங்களை விட்டுவிட்டு போயிட்டாரு. அம்மா மட்டும்தான். குடும்பச் சூழ்நிலைகளால் என்னால் பாலிடெக்னிக் படிப்பைத் தொடர முடியவில்லை. அதனால், செருப்புக் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அதுமட்டுமில்லாமல், டிரைனேஜ், டேங்க் கழுவுவதுனு சின்ன சின்ன வேலைகளையும் பாத்துட்டு இருந்தேன். அப்போ, என்னுடைய அம்மாவை நல்லா பாத்துக்கணும்ங்கறது தான் என்னோட ஒரே ஆசை" என்று கூறியிருந்தார்.
சோசியல் மீடியோ வீடியோகளை பற்றிப் பேசும்போது, "என்னைப் போன்ற கவலையில் இருப்பவர்களைச் சிரிக்க வைக்கத்தான் காமெடி வீடியோக்கள் செய்யத் தொடங்கினேன்" என்று கூறியிருந்தார்.
சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், டான்ஸ் மாஸ்டர் ஆகவும் இருந்திருக்கிறார். இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்துள்ளதாக இவருடைய தம்பி கூறியிருக்கிறார்.
அனைவரையும் சிரிக்க வைத்த இவர், தற்போது உயிரிழந்துள்ளது ராகுலின் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.