தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவே...
Saif Ali Khan : கூச்சலிட்ட பணிப்பெண்: ரத்தம் சொட்ட சொட்ட சைஃப் அலிகானை ஆட்டோவில் அழைத்து சென்ற மகன்
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் நேற்று அதிகாலை மும்பையில் உள்ள அவரின் வீட்டில் இருக்கும் போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த திருடனால் கத்தியால் சரமாறியாக குத்தப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் தற்போது பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வீட்டில் சைஃப் அலிகான் கத்தியால் குத்தப்பட்ட போது அவரது வீட்டில் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் இல்லை. அவர் தனது சகோதரி வீட்டிற்கு சென்று இருந்தார். சம்பவம் குறித்து அருகில் உள்ள சைஃப் அலிகான் மூத்த மகன் இப்ராகிம் அலி கானுக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். அவர் வந்து தனது தந்தையை பார்த்தபோது ரத்தம் வெளியேறிய நிலையில் மிகவும் மோசமான நிலையில் இருந்தார். உடனே இப்ராகிம் தனது தந்தையை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல முயன்றார். ஆனால் காரை அந்நேரம் எடுக்க முடியாத நிலையில் இருந்தது. இதனால் என்ன செய்வது தெரியாமல் தவித்த இப்ராகிம் அலி தனது தந்தையின் நிலைமை மோசமடைந்து வருவதை கண்டு உடனே ஆட்டோ ஒன்றில் ரத்தம் சொட்ட சொட்ட தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துசென்றார்.
சைஃப் அலிகான் உடம்பில் 6 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது. அதில் முதுகுதண்டு வடத்திலும் குத்தப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது தாக்குதல் நடந்த இரண்டு மணி நேரத்திற்கு முன்பு சைஃப் அலிகான் வீட்டிற்குள் யாரும் சென்றதற்கான அடையாளங்கள் தென்படவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். திருட வந்தவன் முன்கூட்டியே வந்து வீட்டிற்குள் வந்து பதுங்கி இருந்திருக்கவேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். அதோடு கத்தியால் குத்தியவன் வீட்டில் வேலை செய்யும் மூன்று பேரில் ஒருவருக்கு தெரிந்தவராக இருக்கவேண்டும் என்றும், அந்த நபர்தான் வெளியில் இருந்து வந்தவனுக்கு வீட்டு கதவை திறந்துவிட்டு இருக்கவேண்டும் என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் வீட்டு வேலைக்காரர்கள் மூன்று பேரையும் பிடித்துச்சென்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கத்திக்குத்து சம்பவத்திற்கு பிறகு நடிகை கரீனா கபூர் தனது வீட்டிற்கு வெளியில் மிகவும் சோகத்துடன் நின்று பேசிக்கொண்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு சைஃப் அலிகான் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் பாலிவுட் பிரமுகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாந்த்ராவில்தான் நடிகர் சல்மான் கான், ஷாருக்கான், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே போன்ற முக்கிய பாலிவுட் பிரபலங்கள் வசித்து வருகின்றனர். எனவே பாந்த்ராவில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸாரை நியமிக்கவேண்டும் என்று நடிகை பூஜா பட் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு இதற்கு முன்பு இது போன்று பாதுகாப்பற்றதாக உணர்ந்ததில்லை என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைத்த திருடனை பிடிக்க போலீஸார் தனிப்படைகள் அமைத்துள்ளனர். குற்றவாளி அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், விரைவில் கைது செய்யப்படுவான் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நுழைந்தது எப்படி?
சைஃப் அலி கான் வீட்டிற்குள் திருடன் நுழைந்தது எப்படி என்பது குறித்து போலீஸார் கூறுகையில், ''திருடன் முதலில் சைஃப் அலிகான் வசிக்கும் 12 மாடி கட்டிடத்திற்கு பக்கத்து கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளான். அங்கிருந்து சைஃப் அலிகான் வசித்த கட்டிடத்திற்குள் நுழைந்துள்ளான். பின்னர் பின் வாசல் வழியாக சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அவனை முதலில் சைஃப் அலிகான் வீட்டு வேலைக்கார பெண் எலியமா பார்த்து கத்தி இருக்கிறார். உடனே சைஃப் அலிகான் எழுந்து உள்ளே நுழைந்தவனுடன் சண்டையிட்டுள்ளார். இச்சண்டையில் சைஃப் அலிகானை 6 முறை கத்தியால் குத்திவிட்டு திருடன் தப்பிசென்றுள்ளான்.
திருடன் கட்டடத்தில் இருந்து வெளியில் செல்வது கட்டிடத்தின் பின்புறம் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். பாதுகாப்பு மிகுந்த கட்டடத்திற்குள் வெளியாள் எப்படி உள்ளே யார் கண்ணிலும் படாமல் சென்றான் என்பது குறித்தும் கட்டட வாட்ச்மென்களிடம் விசாரித்து வருகின்றனர். மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறப்படுவது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், மும்பை பாதுகாப்பற்ற நகரம் என்று கூறுவது சரியல்ல என்று தெரிவித்தார்.