Car Guide: புது கார் வாங்கப் போறீங்களா? 2025-ல் வரப்போகும் கார்கள் இதோ
`எம் பிள்ளை... எங்க அம்மா... என்ன விட்டு போக முடியாது’ - கலங்க வைக்கும் காந்திமதி யானையின் இழப்பு
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடதக்க ஒன்று நெல்லையப்பர் கோயில். நெல்லையப்பர் கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களிலும் யானை காந்திமதி முன் செல்வது வழக்கம். நெல்லையப்பர் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள தனி அறையில் காந்திமதி யானையை கோயில் நிர்வாகம் பராமரித்து வந்த நிலையில் நேற்று உயிரிழந்தது.
யானை காந்திமதியின் இழப்பு பலரையும் கலங்க செய்தது. நேரில் அஞ்சலி செலுத்திய மக்கள் ஒரு புறம், சமூக வலைதளங்களில் கண்ணீர் பதிவுகள் மறுபக்கம் என எண்ணிலடங்கா மக்கள் தங்களின் துயரங்களை வேதனைகளை பகிர்ந்தனர்.
யானையின் இழப்பு குறித்து யானை பாகன் ராமதாஸ், ``1985 ல் கேரள மாநிலம், திருவனந்தபுரம்ல இருந்து இந்த யானை கொண்டு வரப்பட்டுது. அப்போ 14 வயது. ஸ்ரீனிவாசன் என்பவர் தான் முன்னாள் பாகன். அவர் தான் கேரளாவில் இருந்து அழைத்து வந்தார். இந்த யானை நெல்லையப்பர் கோயிலுக்கு நன்கொடையா வழங்குனாங்க. அதற்கு அப்பறம் நாற்பது ஆண்டுகளா இந்த யானையை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன். எந்த பிரச்னையும் பண்ணாது... யாருக்கும் தொந்தரவு குடுக்காது.
ஆனித்தேரோட்டம், ஐப்பசி திருவிழா, திருவாதிரை திருவிழா, கஜபூஜைகளில் காந்திமதியின் பங்கு மிகவும் அதிகம். தினமும் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அபிசேகத்திற்கு கொடுக்கும். தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துட்டு வரும். திருவிழா நேரங்களில் தேருக்கு முன்பு கம்பீரமாக வீதி உலா வரும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே யானைக்கு அதிக எடை காரணமாக உடல்நல குறைபாடு பின்னங்கால் வலி இருந்தது 4.5டன் எடையில் யானை இருப்பதால் தான் இந்த வலி ஏற்படுகிறது. எனவே 80 கிலோ வரை எடையை குறைக்க வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறினர்.
யானையும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தது. மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை நடைபயிற்சி செய்தது. வயது முதிர்வின் காரணமாக முன்பு போல் அதனால இயங்க முடியல. தினமும் நடக்கும் கஜபூஜையிம் யானை இருக்கும் இடத்திலேயே நடந்தது சில நாட்களாக யானையால் உட்கார்ந்து எந்திரிக்க முடியாமல் நின்று கொண்டே தூங்கியது . ஒரு கட்டத்திற்கு மேல் உடல் சோர்வின் காரணமாக முடியாமல் அப்படியே படுத்து விட்டது. வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், அதிகாரிகள் எவ்வளவோ போராடியும் அதனால் எழுந்து நிற்க முடிய வில்லை சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தது.
நாற்பது ஆண்டுகளா இந்த யானையோட தான் இருக்கேன். யாருக்கும் எந்த தீங்கும் இத்தனை ஆண்டுகள் பண்ணது இல்ல. 50 வயதிலும் சின்ன குழந்தை மாதிரி குறும்பு பண்ணும். `என் பிள்ளை, எங்க அம்மா என்ன விட்டு போக முடியாது. அது கூட எனக்கு இருக்கிற பந்தம் ஒரு நாள்ல முடியாது’ என்று கண்ணீர் மல்க கூறினார் யானை பாகன் ராமதாஸ்.
யானை காந்திமதி குறித்து நெல்லையப்பர் கோயிலில் வரும் நெல்லை மக்கள் சிலரிடம் பேசுகையில், 'இந்த யானையின் இழப்ப எங்களால எத்துக்கவே முடியாது. நாற்பது ஆண்டுகளா எங்க கூட இருந்த காந்திமதி அம்மா, எங்கள விட்டு போய்ட்டா... அவ்வளவு பாசமா இருக்கும். சின்ன குழந்தைகள் கூட தொட்டு விளையாடும். அவ்ளோ குறும்பு தனமா பாசமா தாய்மையோட இருப்பா. கோயிலுக்கு போகும் போது எல்லாம் யானையை பார்க்காம போக மாட்டோம். கேரட், அன்னாச்சி எல்லாம் வாங்கிட்டு போய் குடுப்போம். அவ்வளவு விரும்பி சாப்பிடும் காந்திமதினு கூப்பிட்டா ஒடனே திரும்பி பார்க்கும்.
ஒம் நமசிவாய னு சொன்னா தும்பிக்கையை தூக்கி அதுவும் சொல்லும், அதுவும் சுதந்திரதினம், குடியரசு தினம் கொடி ஏத்தும் போது ஒவ்வொரு முறையும் தும்பிக்கை வச்சு சல்யூட் பண்ணும். அவ்வளவு நெகிழ வச்சுருக்கு யானை இல்லாத தேரோட்டத்தை எங்களால நெனச்சு கூட பார்க்க முடியல” என்று கண்ணீருடன் கூறினர்.
யானையின் முன்னாள் பாகன் ஸ்ரீநிவாசன், முதிய வயதிலும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 'இப்படி ஒரு யானை எங்கையும் யாருக்கும் கிடைக்காது அவ்வளவு சாந்தமானது பாசமானது. பத்து வயதில இந்த யானையை கேரளாவில் இருந்து நான் தான் பார்த்துஇங்க அழைத்து வந்தேன். அந்த காந்திமதி அம்மா பெயரையே வச்சாங்க. எங்க அம்மா யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காது” என்று கூறி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
காந்திமதி யானையின் உடல் ரதவீதியில் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டபோது பொது மக்கள் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். யானையின் உடலுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் பொது மக்கள் அனைவரின் அஞ்சலிக்கு பின் யானை காந்திமதியின் உடல் தாமிர குளம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை மக்களின் நினைவுகளில், என்றும் உனக்கு நீங்கா இடம் உண்டு காந்திமதி!