காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கை சமர்ப்பிப்பு
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் ஆயுதப் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) இரவு நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் காஸா விவகாரத்தில் தீர்வை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகப் பேச்சுவார்த்தை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இன்று(ஜன. 13) தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவிடம் ஞாயிற்றுக்கிழமை(ஜன. 12) சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனைத்தொடர்ந்து மேற்கண்ட இரு பிரிவு தலைவர்களும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸ் தரப்புக்கு கத்தார் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னொருபுறம் இஸ்ரேல் தரப்புக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் ஆகிய இவ்விரு விவாதங்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் மையப் புள்ளிகளாக உள்ளன.
இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியான காஸாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் அடுத்த சில நாள்களில் இறுதி வடிவத்தை எட்டும் என்கிற நம்பிக்கையிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன. 20-ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ளார். அதற்கு முன்பாகவே காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகுமென எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.