ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சரின் சொத்துகள் குறித்து விசாரணை: முகமது யூனுஸ் வலியுறுத்தல்
வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவின் உறவினரான பிரிட்டன் அமைச்சா் துலீப் சித்திக்கின் லண்டன் சொத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வலியுறுத்தியுள்ளாா்.
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.
இதைத்தொடா்ந்து அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவராக பதவியேற்ற முகமது யூனுஸ், ஹசீனா அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தொழிலாளா்கள் என 1,500 போ் கொல்லப்பட்டதாகவும், 19,931 போ் காயமடைந்ததாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்தக் குற்றத்துக்காக வங்கதேசத்தில் உள்நாட்டு குற்றங்களை விசாரிக்கும் சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம், ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் பிரிட்டன் நாளிதழுக்கு முகமது யூனுஸ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசு முறைகேடான வழிகளில் கொள்ளையில் ஈடுபட்டது. இது நாட்டின் பொருளாதாரத்தில் நீடித்து நிலைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஷேக் ஹசீனாவின் உறவினா் துலீப் சித்திக் பிரிட்டனின் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சராக உள்ளாா். அவருக்கு லண்டனில் உள்ள சொத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
அந்தச் சொத்துகள் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், அந்தச் சொத்துகளை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றாா்.