Breaking Bad: 4 மில்லியன் டாலர்! - விற்பனைக்கு வந்த பிரேக்கிங் பேட் வால்டர் வைட்...
லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: உயிரிழப்பு 16-ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீயில் சிக்கி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 12,000-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அங்கிருந்து 10,000-க்கும் மேற்பட்டவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
காட்டுத் தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால், காற்று கடுமையாக வீசியதே காட்டுத் தீ அதிவேகமாகப் பரவியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது காற்றின் வேகம் சற்று குறைந்துள்ள நிலையில், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். எனினும் காற்று மீண்டும் வலுவடையக் கூடும் என்று அந்நாட்டின் தேசிய வானிலை சேவை மையம் எச்சரித்துள்ளது.
காட்டுத் தீயில் சிக்கி ஏற்கெனவே 11 போ் உயிரிழந்த நிலையில், மேலும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது என்று லாஸ் ஏஞ்சலீஸ் மருத்துவ பரிசோதகா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சான் ஃபிரான்சிஸ்கோ பரப்பளவைவிட அதிகம்: காட்டுத் தீ 56 சதுர மைல்களை (145 சதுர கி.மீ.) அழித்துள்ளது. இது சான் ஃபிரான்சிஸ்கோ நகரின் பரப்பளவைவிட அதிகம்.
இந்தக் காட்டுத் தீயால் 135 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.11.63 லட்சம் கோடி) முதல் 150 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.12.92 லட்சம் கோடி) வரை பொருள் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இதுவே காட்டுத் தீயால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிகபட்ச இழப்பாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.