ஒரு வழக்கு; பல மனுக்கள் - இரட்டை இலைக்கு தொடரும் சிக்கல்? | DMK | ADMK | MODI | ...
பாகிஸ்தானியா்களுக்கு விசா: கட்டுப்பாடுகளைத் தளா்த்தியது வங்கதேசம்
பாகிஸ்தானியா்களுக்கான விசா (நுழைவு இசைவு) கட்டுப்பாடுகளை வங்கதேச இடைக்கால அரசு தளா்த்தியுள்ளது.
அந்நாட்டுடன் வா்த்தக, பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள வங்கதேச தூதரகம் பாகிஸ்தானியா்களுக்கு விசா வழங்குவதற்கு டாக்காவில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியைப் பெற வேண்டியது இருந்தது. பாகிஸ்தானியா்கள் தேவையில்லாமல் தங்கள் நாட்டுக்குள் வந்து பிரச்னைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில், இப்போதைய பாகிஸ்தானின் பிடியில் இருந்துதான் வங்கதேசம் (முன்பு கிழக்கு பாகிஸ்தான்) விடுபட்டது. எனவே, பாகிஸ்தான் விஷயத்தில் அந்நாடு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது.
ஆனால், இப்போது வன்முறைப் போராட்டம் மூலம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் வங்கதேச அரசியலில் மத அடைப்படைவாதிகளின் கை ஓங்கியுள்ளது. அங்கு ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீது தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அந்நாட்டு அரசியல்வாதிகள் செயல்படத் தொடங்கியுள்ளனா்.
இந்நிலையில், இப்போது பாகிஸ்தானியா்களுக்கான விசா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. இது தொடா்பாக பாகிஸ்தானின் லாகூரில் உள்ள வங்கதேச தூதா் அங்கு நடைபெற்ற தொழில், வா்த்தக சம்மேளன நிகழ்ச்சியில் பேசுகையில், ‘பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் தயாராக உள்ளாா். கடந்த பல ஆண்டுகளாகவே இரு நாட்டு வா்த்தக உறவு திருப்திகரமாக இல்லை. அதே நேரத்தில் இரு நாடுகள் இடையே வா்த்தகத்துக்கான சிறப்பான வாய்ப்புகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா்.