ஜம்மு-காஷ்மீர்: எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டதில் வீரர் காயம்
ரௌடியை தேடிச் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு - சங்கரன்கோவிலில் பரபரப்பு!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு ரௌடி ஒருவர் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாம் போலீஸிடம் கேட்டோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சங்கரன்கோவிலை அடுத்த பணவடலிசத்திரத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை காவலராக மாரிராஜா என்பவர் பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் விழா நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகைகளின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரௌடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்கள் எங்கு உள்ளனர்? தற்போது என்ன செய்கிறார்கள்? என்ற விவரத்தை உறுதிப்படுத்துவது போலீஸின் பணி.
அந்தவகையில் வருகிற பொங்கல் பண்டிகையை ஒட்டி பணவடலிசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட ரௌடிகளின் பட்டியலின்படி அவர்களின் இருப்பை உறுதி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அதன்படி கருத்தானூரைச் சேர்ந்த லெனின்குமார் என்பவர் ஊரில் உள்ளாரா? என்ன செய்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தலைமை காவலர் மாரிராஜா உட்பட இரண்டு பேர் சென்றார்கள். அப்போது போலீஸூடன் லெனின்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, எதிர்பாராத சமயத்தில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலைமை காவலர் மாரிராஜாவை கை, வயிறு மற்றும் கழுத்து பகுதியில் லெனின்குமார் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த காவலர் மாரிராஜா உடனடியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பணவடலிசத்திரம் போலீஸார், தப்பியோடிய லெனின்குமாரை கைது செய்தனர். போலீஸை வெட்டிவிட்டு தப்பி ஓடிய லெனின்குமார் மீது வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஏற்கனவே 8 வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது" என்றனர்.