பொங்கள் விடுமுறை நாளில் கேந்திரிய பள்ளிகளில் தேர்வு நடத்துவதா?: சு.வெங்கடேசன் க...
தேனி: காவல் நிலையத்தில் கொள்ளை முயற்சி... பரபரத்த போலீஸ்; இருவர் கைது! - நடந்தது என்ன?
தேனி பெரியகுளம் ரோட்டில் ஈஸ்வர் நகரில் போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவு காவல் நிலையம் உள்ளது. நேற்று நள்ளிரவு காவல் நிலையத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டிருக்கிறது. அருகில் இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக போலீஸார் அங்கு வந்தபோது, காவல் நிலையத்தில் இருந்து இருவர் தப்பித்து ஓட முயன்றுள்ளனர். அப்போது முதல்நிலை காவலர் முருகேசன்(35) அவர்களில் ஒருவரைப் பிடிக்க சென்றபோது கல்லால் அடித்து தப்பிக்க முயன்றுள்ளார். அருகே இருந்து சிறப்பு எஸ்.ஐ ரமேஸ்(50) தப்பிக்க முயன்றவரை பிடித்தார்.
அவரிடம் இருந்து 2 வீடியோ கேமரா, பைனாக்குலர், ஏர்கன், 200 கிராம் கஞ்சா, 650 மில்லி கஞ்சா ஆயில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், பிடிபட்ட நித்திஸ்குமார் மீது ஏற்கெனவே போதைப்பொருள் நுண்ணறிவுப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்படி தப்பிய மற்றொருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், ``ஈஸ்வர் நகர் பகுதியில் 10 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் தான் காவல் நிலையம் இயங்கி வருகிறது. பெரும்பாலும் பூட்டப்பட்டு தான் இருக்கும். சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்படவில்லை. எப்போதாவது போலீஸ் ஜிப், ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். குடியிருப்புகளுக்கு நடுவே திடீர் திடீரென வாகனங்கள் வந்துசெல்வதே பீதியாக தான் இருக்கும்.
தற்போது அந்த கட்டடத்தில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி நடந்ததாகக் கூறுகிறார்கள். அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு தான் 100-க்கு போன் செய்தோம். அதன்பிறகு போலீஸார் வந்தனர். குற்றவாளிகள் கல்லால் தாக்கியதாகவும், அவர்களிடம் இருந்து பொருள்கள் பறிமுதல் செய்ததாகவும் கூறுகிறார்கள். நள்ளிரவு என்பதால் என்ன நடந்தது தெரியவில்லை. மெயின்ரோடு பகுதிக்கு இந்த காவல் நிலையத்தை மாற்றுவதே நல்லது" என்றனர்.