வசூல்ராஜா MBBS பட பாணியில் தேர்வில் மோசடி... போலீஸ் தேர்வில் சிக்கிய இளைஞர்!
மும்பையில் போலீஸ் தேர்வுக்கு எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் மகாராஷ்டிரா முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் வந்து கலந்து கொண்டனர். மும்பை ஓசிவாரா என்ற இடத்தில் நடந்த தேர்வில் ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த குஷ்னா தல்வி என்பவரும் தேர்வு எழுத வந்தார். அவர் தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது அவரது நடவடிக்கையில் தேர்வு கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தேர்வை கண்காணிக்க வந்தவர் தல்வியை சோதித்துப்பார்த்தார். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. ஆனால் அவரது காதை பார்த்தபோது உள்ளே மிகவும் சிறிய ஹெட் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஹெட் போனை வெளியில் இருந்து பார்த்தால் பார்க்க முடியாது. அது காதிற்குள் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருந்தது. கூர்ந்து கவனித்தால் மட்டுமே கவனிக்க முடியும்.
அந்த ஹெட்போன பறிமுதல் செய்தபோது அதில் அவரது நண்பர்கள் இரண்டு பேர் வெளியில் இருந்து புளூடூத் மூலம் விடையை தெரிவித்துக்கொண்டிருந்தனர். சச்சின் மற்றும் பிரதீப் ஆகிய அந்த நண்பர்கள் வெளியில் இருந்து கொண்டு தல்விக்கு விடைகளை தெரிவித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தல்வியிடமிருந்து மொபைல் போன், சிம்கார்டு, ஹெட்போன் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தல்வி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தல்வி கைது செய்யப்பட்டுள்ளார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில்தான் கமல்ஹாசன் மருத்துவ நுழைவுத்தேர்வு எழுதிய போது ஹெட் போன் பயன்படுத்தி விடையை வெளியில் இருந்து வாங்கி எழுதுவார். அது போன்ற ஒரு சம்பவம் இப்போது மும்பையில் நடந்திருக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் இது போன்ற மோசடி நடந்திருக்கிறது.