பயங்கரவாதிகள் பொருத்திய 3 நவீன வெடிகுண்டுகள் கைப்பற்றல்!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தின் காடுகளிலிருந்து 3 நவீன வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
அம்மாவட்டத்தின் நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான லொவபெரா கிராமத்தின் காடுகளில் நேற்று (ஜன.11) பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். மத்திய ரிசர்வ் காவல் படையினர், கோப்ரா படை, ஜார்க்கண்ட் ஜாகுவார் படை மற்றும் மாவட்ட ஆயுத காவல் படையினர் இணைந்து நக்சல்களுக்கு எதிரான சோதனைகள் மேற்கொண்டனர்.
அப்போது, அந்த காடுகளில் பயங்கரவாதிகள் பொருத்திய 3 ஐ.ஈ.டி எனப்படும் நவீன வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அந்த வெடிகுண்டுகள் ஒவ்வொன்றும் தலா 5 கிலோ எடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:தடை செய்யப்பட்ட யாபா மாத்திரைகள் பறிமுதல்! 2 பேர் கைது!
இந்த குண்டுகளை மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பொருத்தியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. பின்னர், அந்த குண்டுகள் அனைத்தும் நிபுணர்களால் அங்கேயே செயலிழக்கச் செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜன.7 அன்று சிங்பம் மாவட்டத்தின் ஜரைகேலா பகுதியில் மாவோயிஸ்டுகள் பொருத்தியிருந்த நவீன வெடிகுண்டின் மீது தவறுதலாக கால் வைத்த அது வெடித்ததில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலியானர். மேலும் அவருடன் இருந்த ஒரு பெண்ணும் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.