`குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணி இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும்' - இஸ்ரோ நாராயணன் பேட்டி
இஸ்ரோ தலைவராக பதவி ஏற்க உள்ள நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் இன்று சாமிதரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு முக்கியமான பொறுப்பை பாரத பிரதமர் மோடி கொடுத்திருக்கிறார்கள். ஐ.எஸ்.ஆர்.ஓ என்பது மிகப்பெரிய அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பு கிடைத்திருப்பது இறைவனின் அருளும் ஆசீர்வாதமும்தான் காரணம். பெற்றோர், உறவினர், நண்பர்கள் ஆசீர்வாதங்கள் எல்லாம் சேர்ந்து எனக்கு இந்த பொறுப்பு கிடைத்திருக்கிறது. ஐ.எஸ்.ஆர்.ஓ-விலுள்ள 17,500 ஊழியர்கள் அனைவரும் நன்றாக பணியாற்றக் கூடியவர்கள். ஒரு குழுவாக இணைந்து நாட்டுக்காக சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
ஐ.எஸ்.ஆர்.ஓ பணியை பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பாக நான் எதையும் பிரித்து கூற மாட்டேன். மொத்தம் குழுவாக இணைந்து நம் நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற பிரதமர் என்ன வழிகாட்டுதல் கொடுத்து இருக்கிறாறோ அந்த பணியை அனைவரும் இணைந்து செய்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கும் வேலையை செய்து வருகிறோம். ஏற்கெனவே 2 செயற்கை கோள்களை அருகருகே கொண்டு நிறுத்தி நாம் சாதனை படைத்திருக்கிறோம். இது சந்திராயன் 4 நிலவில் தரை இறங்குவதற்கு பயன்படும். இந்தியாவிற்கு விண்வெளியில் ஆய்வுக்கூடம் அமைக்க இருக்கிறோம்.
அடுத்த கட்டமாக ஆட்களை விண்வெளிக்கு கொண்டு சென்று அழைத்து வர இருக்கிறோம். தொலைத்தொடர்பு, தொலை உணர்வு நேவிகேஷன் சேட்டிலைட் ஏவுதல் போன்ற எதிர்கால திட்டங்கள் உள்ளன. நான் பொறுப்பேற்ற பிறகு அனைவருடனும் விரிவாக ஆலோசனை நடத்தி அடுத்த திட்டங்கள் குறித்து அறிவிப்போம். குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதளம் பணி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும். 30,000 கிலோ எடை கொண்ட செயற்கைகோளை சுமந்துசெல்லும் ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடந்துவருகிறது" என்றார்.