மகரஜோதி: புல்மேடு பகுதியிலிருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகர ஜோதி தரிசனம் நடைபெறவிருக்கும் நிலையில், புல்மேடு பகுதியில் மகர ஜோதியை தரிசிக்கும் பக்தர்கள் அப்படியே சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்குகள் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு இடுக்கி மாவட்ட ஆட்சியர் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், செவ்வாய்க்கிழமை (நாளை) மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், சத்திரத்திலிருந்து நடந்து சென்று பக்தர்கள் புல்மேட்டில் மகர ஜோதியை தரிசிப்பார்கள்
மகர ஜோதியை தரிசிக்கும் பக்தர்கள் மீண்டும் சத்திரத்துக்கு திரும்ப வேண்டும். புல்மேட்டில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லக் கூடாது. அவ்வாறு செல்ல முயற்சிப்போரை தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனவிலங்குகள் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு தடை விதிக்கப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குமுளி அருகே உள்ள புல்மேட்டிலிருந்து பாா்த்தால் சபரிமலை சந்நிதானம் தெரியும். இதன் அருகில் உள்ள மலையில்தான் மகர ஜோதி தென்படும். இதை தரிசனம் செய்ய தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கில் கூடுவது வழக்கம்.
அதேவேளையில், ஜன 14 ஆம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை புல்மேட்டிலிருந்து சபரிமலை செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை (ஜன.14) மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.
மகர விளக்கு பூஜைக்காக பந்தளம் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்பட்ட திருவாபரணப் பெட்டி செவ்வாய் மாலை 6 மணிக்கு சந்நிதானம் கொண்டுவரப்படும்.
ஐயப்பன் விக்கிரகத்துக்கு திருவாபரணம் அணிவிக்கப்பட்டு, 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தோன்றும். ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம் முழங்க அனைவரும் ஜோதியை தரிசிப்பது வழக்கம்.
மகர விளக்கு பூஜையின்போது, பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மகர ஜோதியாகத் தோன்றி பக்தர்களுக்கு காட்சி தருவதாக ஐதீகம். மகர ஜோதியைத் தரிசிக்க அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.