``எனக்குத் தெரியாமல் காவலர்களுக்கு பணி'' -உள்துறை செயலருக்கு இன்ஸ்பெக்டர் அனுப்ப...
தன்னைத்தானே வாடகைக்கு விட்டு, ரூ.69 லட்சம் வருமானம்; ஜப்பான் இளைஞரின் `அடேங்கப்பா' தொழில்!
ஜப்பானைச் சேர்ந்த 41 வயதான Shoji morimoto என்பவர் ஒன்றும் செய்யாமல் தன்னை வாடகைக்கு விடுவதற்கு மிகவும் பிரபலமானவர். 2018 ஆம் ஆண்டில் முன்முயற்சி இல்லாமல் பணி செய்ததால் அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு ஒன்றும் செய்யாமல் ஒரு லாபகர தொழில் செய்ய விரும்பினார். அப்பொழுது அவர் தேர்ந்தெடுத்த தொழில்தான், `தன்னை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுவது.' இதில் அவர் விதித்த நிபந்தனை... காதல் அல்லாத தோழமை உறவுக்கு மட்டுமே அனுமதி என்பதுதான். இது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத தோழமையை நாடும் மக்களுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைந்தது. Shoji morimoto-வின் ஒரே நோக்கம், தன்னை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே.
இதனை தவிர்த்து எந்த ஒரு கூடுதல் செயலிலும் அவர் ஈடுபட மாட்டார்.
Morimoto இந்த வித்தியாசமான வேலையைச் செய்வதன் மூலமாக, கடந்த ஆண்டு $80,000 வரை வருமானம் ஈட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய மதிப்பில் 69 லட்சம் ரூபாய் ஆகும். இவர் மாரத்தான் ஓட்டப்பந்தய வீரரை ஆதரிக்கும் விதமாக இறுதி கோடில் காத்திருப்பது, ஒரு வாடிக்கையாளர் தனது அறையை அலங்கரித்து சுத்தம் செய்யும் பொழுது வீடியோ கால்கள் ஏதேனும் வந்தால் அதில் பங்கேற்பது, கச்சேரியில் வாடிக்கையாளர்களுக்கு பதிலாக பங்கேற்று வாடிக்கையாளர்களின் நண்பர்களுடன் தோழமையாவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்.
இவை குறித்து மோரிட்டோ கூறுகையில், "சுட்டெரிக்கும் வெயிலில் பல மணி நேரம் வரிசையில் நின்றிருக்கிறேன். கை கால்கள் உறையும் குளிரில் மணிக்கணக்கில் நின்றிருக்கிறேன். அந்நியர்களுடன் பார்ட்டிகளில் கலந்து கொள்வது, ஒன்றும் செய்யாமல் மிகப்பெரிய பார்வையாளர்கள் முன்னிலையில் மேடையில் தனியாக இருப்பது போன்ற கடினமான சூழ்நிலைகளை தினம் தினம் எதிர்கொள்கிறேன். நான் பல கஷ்டங்களை எதிர்கொண்டதன் பலனாகவே இன்று பலர் என்னைப் பற்றி பேசும் அளவிற்கு உயர்ந்திருக்கிறேன்.
நான் யாமனோட் ரயில் பாதையில் 17 மணி நேரம் பயணம் மேற்கொண்டதும், அதிகாலையில் இருந்து கடைசி ரயில் வரை 13 சுற்றுகள் பயணம் செய்ததும்தான் எனது வாழ்வில் மறக்க முடியாத பயணமாக அமைந்தது. பலர் அவர்களின் வாழ்வில் அரங்கேறிய மிக மோசமான விஷயங்கள் மற்றும் மோசமான நாள்களைப் பற்றி என்னுடன் பகிர்ந்து கொள்வர். நான் ஆலோசனையோ சிகிச்சையோ அளிக்க மாட்டேன். ஆனால் பொறுமையாக காது கொடுத்து அவர்களின் கஷ்டத்தை மட்டுமே கேட்பேன். ஏனென்றால் பலரின் பெரிய பிரச்னையே அவர்கள் கஷ்டத்தை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லாமல் இருப்பதுதான். எனது வாடிக்கையாளர்கள் அவர்களின் கஷ்டங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட பின், அவர்கள் சிறிது மன நிம்மதியுடன் காணப்படுவர். அதுவே எனக்கு திருப்தி அளிக்கிறது. ஓர் ஆண்டிற்கு சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களை பெறுகிறேன். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதற்கு முன்னர் 2-3 மணி நேரத்திற்கு $65 முதல் $195 வரை பணம் வசூலிப்பேன். இதனால் கடந்த ஆண்டு$ 80,000 வரை வருமானம் ஈட்டினேன். இவ்வாறு தனிநபர் வாடகை தோழமை சேவைகளை பலர் நாடுவதற்கு ஒரு முக்கியமான காரணம், அவர்களின் தனிமை மட்டுமே. இன்னும் சிலர் வெறும் தோழமை மட்டுமே விரும்புகிறார்கள்" என்கிறார்.
ஜப்பானில் தற்பொழுது இந்த தனித்துவமான வாடகை சேவை துறை, நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
ஹிட்டோட்சுபாஷி பல்கலைக்கழகத்தின் மனிதவளப் பேராசிரியரான ஹிரோஷி ஓனோ, ``ஒருவர் தனிமையை உணர சமூக அவலநிலையும் ஒரு குறிப்பிடத்தக்க காரணமாக அமைகிறது. பல ஜப்பானியர்களின் மோதல்களை தவிர்பதற்கு இவை உதவினாலும்... உண்மையாகவே நட்பை உருவாக்கும் வாய்ப்பினை அதிக அளவில் பாதிக்கிறது" எனக் கூறுகிறார்.