4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு ! சர்ச்சைப்...
``கபில் தேவை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் சென்றேன். ஆனால்..." - யுவராஜ் சிங்கின் தந்தை பகிர்வு
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதில் பெயர் பெற்றவர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங். இவர் 1980-81-ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் ஆறு ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்.
சமீபத்தில் யோகராஜ் சிங் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ``1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியிலிருந்து நான் நீக்கப்பட்டேன். அப்போது கபில் தேவ் இந்தியா, வடக்கு மண்டலம், ஹரியானாவின் கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை எனக் கடுமையான கோபத்தில் இருந்தேன்.
என் மனைவியும், கபில் தேவ் உங்களுக்காக பேசியிருக்க வேண்டும் எனக் கூறினார். கோபத்தின் உச்சியில் 'அவருக்கு பாடம் கற்பிக்கிறேன் பார்...' என என் மனைவியிடம் கூறிவிட்டு, கையில் துப்பாக்கியுடன் கபில் தேவ் வீட்டை நோக்கி நடந்தேன். அப்போது கபில் தேவ் அவருடைய அம்மாவுடன் வந்துகொண்டிருந்தார். அவருடைய அம்மாவைப் பார்த்தவுடன் என் கோபம் குறைந்துவிட்டது. அப்போதே அவரிடம்,' உன்னை சுட்டுக்கொல்லதான் வந்தேன். ஆனால், உன் அம்மாவைப் பார்த்தவுடன் மனம் மாறிவிட்டது. அதனால் உன்னை உயிரோடு விடுகிறேன். நீ எனக்காக பேசியிருக்க வேண்டும்... ஆனால் நீ அப்படி செய்யவில்லை.' என அவரிடமே கூறிவிட்டு வந்துவிட்டேன்.
அப்போதுதான் இனி கிரிக்கெட் விளையாடக்கூடாது என முடிவு செய்தேன். நான் சுனில் கவாஸ்கருடன் நெருக்கமாக இருந்ததால் என்னை விளையாட்டிலிருந்து நீக்கிவிட்டதாக தெரிந்துகொண்டேன். 2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை வென்றபோது, நான் கபில் தேவ்க்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில், `உங்களைவிட என் மகன் யுவராஜ் சிறப்பாக விளையாடியிருக்கிறான்' எனக் குறிப்பிட்டிருந்தேன். அப்போதும் கபில் தேவ் என்னிடம் மன்னிப்புக் கேட்டார். 'அடுத்த ஜென்மத்தில் நாம் சகோதரர்களாக இருப்போம்' என வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். ஆனால், அவரின் அன்றைய செயல் இன்னும் வலிக்கிறது" எனக் குறிப்பிட்டார்.