செய்திகள் :

BB Tamil 8 Day 96 : `கண்ணனைத் தேடும் பவித்ரா; மனம் புண்பட்ட வர்ஷினி’ - சவுந்தர்யா சாபம் பலித்ததா?

post image
கேரக்டர் ரோல் டாஸ்க்கில் நிச்சயம் முந்தியது ‘டாப் 8’ அணிதான். அதிலும் டாப் 3 என்று பார்த்தால் முத்து, தீபக், பவித்ரா என்கிற ஆர்டரைச் சொல்லலாம். மூவரும் பெரும்பாலும் தங்களின் கேரக்டர்களில் இருந்து விலகாமல் இருந்தார்கள். அதிலும் consistent ஆக இருந்து ‘சுமார் மூஞ்சி குமாராகவே’ வாழ்ந்த முத்து அல்டிமேட்.

யார் இரண்டு பேர் ரீபிளேஸ் ஆவார்கள் என்பதுதான் இன்றைய நாளின் சஸ்பென்ஸூம் எதிர்பார்ப்பும். அர்னவ், தர்ஷா குப்தா போன்றவர்களால் எந்த உபயோகமும் இல்லை. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 96

காலை. சவுந்தர்யாவை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார் அர்னவ். ரவி மாதிரி எதையாவது மண்டையைக் கழுவ முயல்கிறார் போல. ‘ஜாக்குலின் உனக்குப் போட்டியாளரா?’ என்று அர்னவ் கேட்க, “எமோஷன் வழியாக மத்தவங்களை பலவீனமாக்கிறாங்க” என்று அதே பல்லவியை பாடினார் சவுண்டு.  இந்தப் பஞ்சாயத்து என்று ஓயுமோ?!

bb8

இடையில் குறுக்குச்சால் ஓட்டிய வர்ஷினி, ‘சிம்பதி ஓட்டுக்கு டிரை பண்றீங்களே.. விக்டிம் கார்டாக காட்டிக்கறீங்களே..அது என்ன?” என்று சவுந்தர்யாவை முகத்திற்கு நேராக கேட்டார். “ஏன்.. உங்களுக்கு மனசு வலிச்சா. அழ மாட்டீங்களா.. எனக்குப் பேச வராது. அழறதுதான் என் பலம்” என்றார் சவுண்டு. ‘அழறது பலவீனத்தோட அடையாளமாச்சே.. அது எப்படி பலமாகும்?’ என்று வர்ஷினி சரியாக கேட்டாலும் சவுண்டிடம் பதில் இல்லை. (அவருக்குத்தான் பேச்சு வராதே?!). 

ஆனால் சவுந்தர்யாவிற்கு ஒரு ராசி இருக்கிறது. ‘என்ன அழுது சீன் போடறியா?’ என்று யாராவது சவுண்டை கேட்டு விட்டால், அப்படிக் கேட்பவர் சில நிமிடங்களிலேயே அழுவது போன்ற சூழல் அமைந்து விடும். முன்பு சாச்சனாவிற்கு அப்படியாக ஆனது என்று நினைவு. இப்போது வர்ஷினிக்கும் அதே போல் ஆனது தற்செயலா, அல்லது சவுந்தர்யா கொடுத்த சாபமா?!

“முத்துவிடம் என்ன வீக்னஸா தெரியுது?” என்று வர்ஷினி கேட்க “அவனுக்கு வெற்றி குறித்த பயம் இருக்கு. வெளில காட்டாம நடிக்கறான்” என்றார் சவுண்டு.

பச்சை நிற கண்ணனைத் தேடியலையும் பவித்ரா

பவித்ராவும் ரயானும் இந்த டாஸ்க்கில் ‘லவ் டிராக்’ மூலம் சுவாரசியப்படுத்த முடியுமா என்று பார்க்கிறார்கள். ஆனால் ரொம்பவும் கிரிஞ்சாக இருக்கிறது. அதிலும் ‘கொய்ங்.. கொய்ங்’ என்கிற டோனில் பேசும் பவித்ராவின் தமிழைக் கேட்டால் ரொமான்ஸ் வராது என்று தோன்றுகிறது. பழைய திரைப்படங்களில், தொலைந்து போன குடும்ப உறுப்பினர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஒரு ‘குடும்பப் பாடல்’ இருப்பதைப் போல இந்த டாஸ்க்கில் இவர்களாக ஒரு கதையை உருவாக்கினார்கள்.

bb8

சிறு வயதில் இரண்டு கிருஷ்ணன் பொம்மைகள் இருந்ததாம். அந்தப் பொம்மை இப்போது யாரிடம் இருக்கிறதோ, அவர்தான் பவித்ரா தேடியலையும் கண்ணனாம். அந்தப் பொம்மையை வைத்திருக்கும் ராஜகுமாரனாக ரயான் பாவனை செய்து கொண்டிருந்தார். எதையாவது செய்து காமிராவின் கண்களில் பட வேண்டுமே?! 

பச்சைத் தலையர் இப்படியாக முயன்று கொண்டிருக்க ‘தல’யால் சும்மா இருக்க முடியுமா? அவரும் ரியாவிற்கு ரூட் விட முயன்று கொண்டிருந்தார். “அந்த உப்புமா சாப்பிடற அழகு இருக்கே. விரல்லயும் படாம.. கையலயும் படாம.. சாப்பிடற க்யூட்னஸ் பார்க்க செமயா இருக்கு” என்று சிவா வழிய பயங்கரமாக வெட்கப்பட்டார் ரியா. (தல எந்தப் படத்தலயும் இப்படி வழிந்ததில்லை. லாஜிக் எரர்?!)

‘அடடா.. அடடா.. எனை ஏதோ செய்கிறாய்’ என்கிற பாடல் ஒலிக்க, மேடையைத் தாண்டி கார்டன் ஏரியா முழுவதிலுமாக துள்ளிக் குதித்து ஹாசினியை ரீப்ளே செய்ய முயன்று கொண்டிருந்தார் ஜாக்குலின். 

கிச்சன் ஏரியாவில் ‘யார் சமைப்பது’

‘ஒரு கதை சொல்லட்டுமா சார்?’ என்று தீபக்கிடம் வந்தார் ரயான். தன் கிருஷ்ணன் பொம்மை கதையை அவர் ரொம்பவும் கிரிஞ்சாக கூற “நீ தேடற ஆளு இருபது வயசுக்கு மேலன்னா அந்தப் பக்கம் போ. நாற்பது வயசுக்கு மேலன்னா.. இங்க தேடு” என்று தீபக் கலாய்த்தார். அவர் ‘இந்தப் பக்கம்’ என்று சொன்ன திசையில் ஜாக்குலின், சவுந்தர்யா போன்றோர் அமர்ந்திருந்தார்கள். மீண்டும் ‘கொய்ங்க்.. கொய்ங்க்’ டோனில் அங்கு வந்த பவித்ரா “இன்னிக்கு என் கண்ணன் கிடைச்சுடுவான். குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்று மகிழ்ந்து கொண்டிருந்தார்.

bb8

“நீங்கதான் அந்தக் கண்ணனா. அதென்ன ரெண்டு இடத்துலயும் ரூட்டு விடறீங்க?” என்று ரயானிடம் ஆச்சரியப்பட்டார் சுனிதா. (கண்ணன் கேரக்டர் அதுதான்!). “இல்ல. ஜாக் என் பிரண்டு” என்று தெளிவுப்படுத்தினார் ரயான். ‘என் வீட்டுல நான் இருந்தேனே’ என்கிற பாடல் ஒலிக்க, டான்ஸ் ஆடத் தெரியாத முத்து எப்படியோ தன்னை மேம்படுத்திக் கொண்டு நன்றாக நடனம் ஆடினார். 

ஒரு வேலை செய்யச் சொன்னால் மூக்கால் அழுது அதை மறுப்பதுதான் பிக் பாஸ் வீட்டின் வழக்கம். ஆனால் இந்த வாரத்தில் ‘யார் சமைப்பது?’ என்பதில் பெரிய போட்டியே நடக்கிறது. ‘எனக்கு சான்ஸ் கொடு.. எனக்கு சான்ஸ் கொடு’ என்று பலரும் முட்டி மோதுகிறார்கள். கிச்சன் ஏரியாவில் நின்றால் காமிராவின் கண்களில் இருந்து தவறவே முடியாது என்பது காரணம் போல.

தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் சவுந்தர்யா செய்த பிரச்னை நேற்றுதான் சற்று தணிந்தது. இப்போது அது மீண்டும் பற்றிக் கொண்டது. கிச்சன் டீமில் இல்லாத அருண், தக்காளி நறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த வர்ஷினி “அப்ப எனக்கு எப்பதான் சான்ஸ் கொடுப்பீங்க?” என்று ஆட்சேபித்தார். ‘நேத்து சவுந்தர்யாவிற்கு தரலை. இப்ப எப்படி அருண்?” என்பது அவரது கேள்வி. 

தீபக் சொன்ன கமென்ட்டால் மனம் புண்பட்ட வர்ஷினி

தனது புகாரை கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த நபர்களிடம் கொண்டு சென்றார் வர்ஷினி. “ஜாக்குலின் அவங்க பிரெண்ட்ஸூக்கு மட்டும்தான் சான்ஸ் கொடுப்பாங்க” என்று புழுங்கினார் சவுந்தர்யா. பிறகு வந்த ஜாக்குலினிடம் இந்தப் பஞ்சாயத்தைப் பற்றி ரவி விசாரிக்க, “அதை கிச்சன் இன்சார்ஜ் கிட்டதான் கேக்கணும். அருண் தக்காளி மட்டும்தான் வெட்டினாரு. சமையல் இல்ல” என்று காரணம் சொன்னார். ‘ஓ.. Prep work-ஆ?’ என்று ஜாக்குலினை எஸ்கேப் ஆக்க முயன்றார் ரவி. தக்காளி வெட்டுவது சமையலின் பங்கு இல்லையோ?!

bb 8

இந்தப் பஞ்சாயத்தை மௌனமாக கவனித்துக் கொண்டிருந்த தீபக், “கதையில் எந்தப் பகுதியில் விளையாட வேண்டும் என்று கூட தெரியவில்லை” என்று வர்ஷினி குறித்து போகிற போக்கில் சொன்ன கமெண்ட் பிறகு பெரிதாக வெடித்தது. தன்னைக் குறித்து வந்த தீபக் கமெண்ட் காரணமாக மனம் புண்பட்ட வர்ஷினி அழுவதற்கான ஆயுத்தங்களைச் செய்ய ‘அய்யோ.. அதை மட்டும் செய்யாதே.. நீ ஸ்ட்ராங்க்ல?” என்று ஆறுதல் சொன்னார் ரியா. அப்போதுதான் வர்ஷனியின் அழுகை பெரிதாக வெடிக்க ஆரம்பித்தது. ‘அழாத’ என்றால் அழுகை வெடித்துக் கொண்டு வருவது பலரின் இயல்பு.

“வாங்க… நான் உங்களுக்கு நீதி வாங்கித் தரேன்” என்று ஆவேசமாக எழுந்தார் நீலாம்பரியான சாச்சனா. அதுவரை திருமண வீட்டில் சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட்டு ஓய்வெடுப்பதைப் போன்று ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருந்த சாச்சனாவிற்கு திடீரென சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அறச்சீற்றம் வந்து விட்டது.

‘எனக்கா ஆடத் தெரியாது?. நீங்கதான் சேஃப் கேம் ஆடறீங்க” - வர்ஷினி கோபம்

“இதுக்கெல்லாமா அழுவாங்க.. அதுக்கு நான் பொறுப்பு இல்ல” என்றார் தீபக். வீட்டின் உள்ளே ஆளாளுக்கு வர்ஷினியை சமாதானப்படுத்த முயன்றார்கள். “அவருக்கு மட்டும்தான் விளையாடத் தெரியுமாமா.. நாங்க என்ன தக்காளி தொக்கா.. இந்த ரெண்டாவது சான்ஸ்ல என்னை ப்ரூவ் பண்ணிடனும்னு அலைமோதிட்டு இருக்கேன். எனக்கு விளையாடத் தெரியலைன்னு சொல்லி டவுன் பண்றாரு.. அவரு பெரிய பிளேயரா?’ என்று தீபக் குறித்து பொங்கி எழுந்தார் வர்ஷினி. 

“நீங்க அழுது நாங்க பார்த்ததேயில்ல” என்று ஆறுதல் சொன்ன அருண், “அது வந்து.. அவர் அந்தக் கேரக்டர்ல இருக்கார்ல.. அதான் அப்படி ஸ்பீடா டப்புன்னு பேசிட்டாரு” என்று தீபக்கிற்கு ஆதரவாக அருண் பாயிண்ட்டை எடுத்து முன் வைக்க “அது எந்த எழவு கேரக்டரா வேணா இருக்கட்டும். இன்னொருத்தரை காயப்படுத்தலாமா?” என்று அழுகையின் இடையே பொங்கினார் வர்ஷினி. (பேச்சுக்கு நடுவுல அண்ணனை ஏதாவது தப்பா சொன்னியா மோமெண்ட்!).

bb8

கார்டன் ஏரியாவில் தொடர்ந்த விசாரணைக்கு ஜாக்குலின் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “இன்னொருத்தர் பொறுப்புல நாம எப்படி தலையிட முடியும்? அது என்னோட பொறுப்பு கிடையாது” என்று பொறுப்போடு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஜாக். “நான் கிச்சன் டீம்ல இருக்கும் போது, டீம்ல இல்லாத தீபக் கூட வந்து சமைப்பாரு. அவரோட கண்ட்ரோல் ஓவரா இருக்கும்ன்றதால் நான் ஒதுங்கிடுவேன்.” என்று பக்கத்தில் சிவனே என்று அமர்ந்திருந்த தீபக்கின் தலையில் வம்படியாக கொட்டினார் சவுந்தர்யா. 

மீண்டும் தீபக்கிடம் வேகமாக வந்த வர்ஷினி “நீங்க பேசினது சரியா?” என்று கோபத்துடன் கேட்க “நானாம்மா.. என்னையா சொல்றீங்க.. நான் சொன்னதா ஹர்ட் ஆச்சு?” என்று சிவாஜி மாதிரி நடித்தார் தீபக். (இதுக்கெல்லாம் ஹர்ட் ஆனா ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சற்று முன்பாக சொன்னவர்தான் இவர்!)

சவுந்தர்யாவின் சாபம் பலித்ததா?

ஆக்சுவலி, வர்ஷினி இப்படி சீன் போட்டு அழும் அளவிற்கு தீபக் சொன்ன கமெண்ட் அப்படியொன்றும் பெரிய விஷயமில்லை. ‘எந்த இடத்தில் கேம் ஆடணும்னு தெரியல” என்பதே வர்ஷினி குறித்து அவர் சொன்ன விமர்சனம். இதை சவாலாக எடுத்துக் கொண்டு வர்ஷினி தன்னை நிரூபிக்கலாம். மாறாக அழுவது அவரது பலவீனத்தை மட்டுமே காட்டுகிறது.

“சரிம்மா… நான் சும்மா கேஷூவலாத்தான் சொன்னேன். ஹர்ட் ஆகியிருந்தா ஸாரி” என்ற தீபக் “அழாத.. கண்ணைத் துடை..சிரி.. இப்ப எப்படியிருக்கு மூஞ்சி?” என்று பிரபா ஒயின்ஸ் வடிவேலு காமெடி மாதிரி சமாதானப்படுத்தினார். ஆனால் இப்படி சமாதானப்படுத்தும் முயற்சியில் ‘படையப்பா’ காணாமல் போய் விட்டார் என்பதை தீபக் உணரவில்லை. (அந்த ஒட்டுதாடி எப்படித்தான் கீழே விழாமல் இருக்கிறதோ?!)

bb tamil 8

அடுத்த கேட்டகிரியை கையில் எடுத்துக் கொண்டு குடைய ஆரம்பித்தார் ரவி. அது சவுந்தர்யா மற்றும் ஜாக்குலின் இடையில் இருப்பது உண்மையான நட்பா அல்லது ஆட்டத்திற்காக செய்யப்படும் பாவனையா என்கிற தலைப்பில் ஒரு பட்டிமன்றம். “ஆட்டத்தில் ஜாக்கின் கேரக்டரும் கலந்தே இருக்கிறது” என்று சவுந்தர்யா குற்றம் சாட்ட “எனக்கு கேம் ஆட வராதும்மா” என்று ஹர்ட் ஆனார் ஜாக்குலின். 

தீபக் சமாதானப்படுத்தினாலும் வீட்டிற்குள் கோபமாக சென்ற வர்ஷினி, அனைவரையும் குற்றம் சாட்ட “பன்மைல சொல்லாதீங்க” என்று ‘தல’ சிவா தலையிட ‘ஆமாம்டா.. அப்படித்தாண்டா சொல்வேன். அவரு சேஃப் கேம் ஆடறது உங்களுக்கெல்லாம் தெரியலை’ என்கிற மாதிரி கோபமாக சொல்லி விட்டு மீண்டும் வெளியே சென்றார். ‘சேஃப் கேம் ஆடுகிற தீபக்கை ஏன் யாரும் இன்னமும் தொடவில்லை?” என்று ரவி நேற்று கேட்ட கேள்விக்காக வர்ஷினி இப்படி ஃபர்பாமன்ஸ் செய்கிறாரோ?!

சவுந்தர்யா, ஜாக்குலின் - தேவா, சூர்யா நட்பு

அடுத்து அழ வேண்டியது ஜாக்குலின் டர்ன். சவுந்தர்யா சொன்ன குற்றச்சாட்டால் மனம் புண்பட்ட ஜாக், “ஏண்டா.. இப்படில்லாம் பேசறா. முதல் வாரம் அவ கஷ்டப்பட்டாலேன்னு உதவி செய்யப் போனேன். தெரியாமப் போயிட்டேன். பிடிச்சது ஏழரை வருஷ சனி. அதுல இருந்து நான் கஷ்டப்படறேன்” என்பது மாதிரி ஜாக் புலம்ப “ரெண்டு பேரும் தனியா உக்காந்து பேசுங்க.. இல்லைன்னா.. இந்த கேம் இப்படித்தான்னு நெனச்சு ஆடுங்க. எதையாவது செஞ்சித் தொலைங்க.. பக்கிகளா.. உங்க பஞ்சாயத்து பெரிய பஞ்சாயத்தா இருக்கு’ என்கிற மாதிரி அன்புடன் சமாதானப்படுத்தினார் ரயான். 

‘தசாவதாரம்’ படத்திலிருந்து ஓக்ஹோ. சனம்.. ஓக்ஹோ’ பாடல் ஒலிக்க ‘சிங்’ வேடம் போட்டு ஆடும் பிளானில் இருந்த பவித்ரா, ‘தாடி.. தாடியை வாங்குங்க’ என்று பதறி ஓடினார். தீபக்கிடமிருந்து தாடியை இரவல் வாங்கிக் கொண்டு ஒட்டி ஆடினாலும் அது உடனே கீழே விழுந்தது.

bb8

சாச்சனாவிற்கும் தனக்குமான பஞ்சாயத்தைப் பற்றி பவித்ராவிடம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார் ரயான். அவரும் பொறுமையாக கேட்டு சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். (அப்ப கண்ணன் கிடைச்சுட்டானா?!) தட்டு கழுவாத பிரச்சினையைப் பற்றி ரயான் சொல்ல “அவ வேணும்ன்ட்டே பண்றா.. நீங்க ஏன் அதுக்கு ஸ்பேஸ் தரேள்?” என்பது பவித்ராவின் கேள்வி. 

‘ஓஹஹோ.. கிக்கு ஏறுதே’ என்று படையப்பா படத்திலிருந்து பாடல் ஒலித்தது. ரஜினியின் உடல்மொழியில் நன்றாக ஆடி சமாளித்தார் தீபக்.  இத்துடன் இந்த டாஸ்க் முடிந்ததாக சொல்லி கலைத்தாயின் வயிற்றில் பாலை வார்த்தார் பிக் பாஸ்.

“வெளில போறதுக்கு யார் டிஸர்வ்?” என்று முத்துவிடம் கேட்டு அறிய முயன்றார் சாச்சனா. “வெளில போனவங்கள்லாம் டிஸர்வ் கிடையாதுன்னு அர்த்தமில்ல. உள்ளே இருக்கறவங்கள்லாம் டிஸர்வ்ன்னும் அர்த்தமில்ல. மக்கள்தான் முடிவு பண்ணணும். நாளைக்கே என்ன அனுப்பினாலும் போய்த்தான் ஆகணும்” என்று முத்து சவடாலாக பேச “அதான் நீ உள்ள இருக்கே” என்று பாராட்டி விட்டுச் சென்றார் சாச்சனா. (வெளில அனுப்ப மாட்டாங்கன்ற தைரியம்தானே முத்து?!)

‘அது சேஃப் கேம் இல்ல. ஸ்மாாட் பிளே’ - புது விளக்கம் சொன்ன தீபக்

கிச்சன் ஏரியாவில் மீண்டும் ஒரு பஞ்சாயத்து. ‘நான் தக்காளி குழம்பு பண்ணட்டுமா?” என்று சாச்சனா ஆசையாக கேட்க அதற்கு பர்மிஷன் வழங்கலாமா, வேண்டாமா என்று குழப்பம். இதற்கு சவுந்தர்யா சிறப்பு அனுமதி வழங்கினார். மீண்டும் ஆட்சேபத்திற்கு வந்தார் வர்ஷினி. ‘தேங்கால குருமா வைக்கலாம். பாம் வைக்கலாமா?’ மொமெண்ட்.

bb8

பைக்கிற்காக நடந்த போட்டியில் பரபரப்பாக ஆடி முத்து வென்றார். ஆனால் அவர் ஒட்டிய புகைப்படம் சரியாக இருந்ததா? என்றாலும் நடுவரான ரயான் முத்து வென்றதாக அறிவித்தார். “ரயான் இத்தனை நாள் இருந்ததே சவுந்தர்யா சப்போர்ட்லதான். அதனாலதான் டிக்கெட் கூட ஜெயிக்க முடிஞ்சது’ என்று அர்னவ் புறணியை ஆரம்பிக்க “அதுவும் ஒரு ஸ்ட்ரேட்டஜியா இருக்கலாம்’ என்றார் சுனிதா. 

தன்னை சேஃப் கேம் ஆடுகிறவர் என்று மற்றவர்கள் இப்போது சொல்ல ஆரம்பித்திருப்பதால் ‘அது ஸ்மார்ட் பிளே’ என்று புது விளக்கம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் தீபக். ஒருவழியாக சவுண்டு்ம் ஜாக்கும் பேச அமர்ந்தார்கள். ‘நட்பா கேமா’ என்கிற அதே வழக்கமான பட்டிமன்ற விவாதம். அடப்போங்கப்பா.. போரடிக்குது.

இன்று பஞ்சாயத்து நாள். புதிதாக வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்கிற ரிப்போர்ட் கிடைக்கும். எந்த இரண்டு பேர் ரீப்ளேஸ் ஆகப் போகிறார்கள் என்பதும் தெரிந்து விடும். 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Vadivelu: "இருக்கிறவுங்கட்ட வரிய போட்டு தள்ளுங்க; ஏழைகளுக்குப் பார்த்து வரி போடுங்க" - வடிவேலு கலாய்

"மாமன்னன் கேரக்டர்தான் உண்மையான வடிவேலு. மாமன்னன் படத்தில் வருவது போலக் கஷ்டத்தை அனுபவித்தவன். அதனால்தான் நகைச்சுவை நடிகனாக மாறினேன்" என்று மதுரையில் நடந்த விழாவில் நடிகர் வடிவேலு பேசினார்.வடிவேலுமதுர... மேலும் பார்க்க

``நல்ல கணவரை தேடிட்டிருக்கேன்; முதல் கல்யாண பத்திரிகை உங்களுக்குதான்..!’ - நடிகை சித்தாரா பர்சனல்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள்... மேலும் பார்க்க

ஜெயச்சந்திரன் : `16,000 பாடல்கள்; கேரள அரசின் 5 விருதுகள்’ - காலத்தால் அழியாத குரலுக்கு சொந்தக்காரர்

பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் திருச்சூர் பூங்குந்நத்து வீட்டில் வசித்துவந்தார். ஏற்கனவே அவருக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்னையால் உடல்நலக்குறைவு இருந்து வந்ததால் கடந்த ஓராண்டாக சிகிச்சை எடுத்து வந... மேலும் பார்க்க

Game Changer : `எனக்கு கில்லி, தூள் படங்கள் பிடிக்கும்; அதுமாதிரி ஒரு படம்.!’ - ஷங்கர் எக்ஸ்க்ளூஸிவ்

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளிவருகிறது. இந்த நிலையில் இயக்குநர் சங்கரை சந்தித்து பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்..`கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி தொடங்க... மேலும் பார்க்க

BB Tamil 8 Day 94: சாச்சனாவின் சகுனியாட்டம்; உஷாரான முத்து; `வெளில போங்க’ - பிக் பாஸ் வார்னிங்

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தோடு எச்சரிக்கை, எவிக்ஷன் பயமுறுத்தல் என்று கலவையான எபிசோடாக இருந்தது. புதிதாக வந்தவர்கள், வந்த சூடு உடனே ஆறிப் போய் என்ன செய்வதென்று விழிக்கிறார்கள். ‘தாங்களும் போட்டியாளர... மேலும் பார்க்க