ஒருநாள் போட்டிகளில் ஆஸி.யை வீழ்த்துவது மிகவும் கடினம்: இங்கிலாந்து கேப்டன்
திமுக சொல்லி தான் செய்தீர்களா?; `நான் சொல்லக்கூடாது, ஆனாலும் சொல்கிறேன்’ - வேல்முருகன் எக்ஸ்க்ளூஸிவ்
`பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அரசியல் தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநர் செயல்பாடு, ஆளும் கட்சி செயல்பாடு உள்ளிட்ட நமது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்...
``பரபரப்பான சூழ்நிலையில் இந்த ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி முடிந்திருக்கிறது, ஒரு சட்டமன்ற உறுப்பினராக நடந்த நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?”
``ஒரு சட்டமன்ற உறுப்பினராக பார்க்கும்போது, நடந்து வருகின்ற நிகழ்வுகள், பெரும்பாலும் ஜனநாயக தன்மையோடு பல்வேறு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. ஆளுநர் உரையாற்றாமல் ஓடோடி சென்று இருக்கிறார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் மன்மோகன் சிங் மறைவிற்காக பேரவை இரண்டு நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதன் பின்னர் தான் 234 தொகுதிகளை உள்ளடக்கிய பிரதிநிதிகள் ஆளுநர் உரையின் மீது பேசுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. கிடைக்கின்ற ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடத்திற்குள் அனைத்து பிரச்சனைகளையும் பேசி முடிக்க வேண்டும்.”
``ஜனநாயகத்தின் படி சட்டமன்றம் நடைபெறுகிறதா?”
``அதைத்தான் நான் முன்னரே சொன்னேன். ஜனநாயக மாண்புகளுக்கும் மரபுகளுக்கும் எதிரான கவலைக்குரிய விஷயங்கள் தான் நடந்து வருகின்றன. உதாரணத்திற்கு, தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் நடந்து கொண்டது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத, மன்னிக்க முடியாத ஒரு மாபெரும் குற்றம். சட்டமன்றம் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த மரபுகள் இதுவரையில் மீறப்படாமல், இதே இந்திய ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட பல்வேறு ஆளுநர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. நானும் 2001 இல் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். பீஷ்மன் நாராயண சிங் தொடங்கி பஞ்சாப்பை சேர்ந்த பர்னாலா போன்ற நிறைய ஆளுநர்களை நான் பார்த்துள்ளேன்.
`கடந்த முறை ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினோமோ அதே போன்ற ஒரு குழப்பத்தை இப்போதும் ஏற்படுத்த வேண்டும்’ என்ற எண்ணத்தோடு வருகிறார். கடந்த முறை என்னவென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை, முதலமைச்சர், தலைமைச் செயலாளர், அரசு துறை செயலாளர் எல்லோரும் ஒன்று கூடி தான் கவர்னருக்கான உரையை தயாரிப்பார்கள். அந்த உரை என்பது ஒரு அரசின் உரை. அந்த உரையை படிப்பது தான் ஆளுநரின் கடமை. அதையெல்லாம் அவர் படிக்காமல் அவர் இல்லாத சிலவற்றையெல்லாம் படித்தார். அதற்கு அவை முன்னவர் உடனடியாக எதிர்வினை ஆற்றினார். அதில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது கோபித்துக் கொண்டு ஓடினார்.
இப்போது படிக்கக்கூட இல்லை. ஆனால் வந்த உடனே திரும்பத் திரும்ப ஆங்கிலத்தில் சொல்கிறார். தமிழ் தாய் வாழ்த்து பாடும் பொழுது தேசிய கீதம் பாட வேண்டும். தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூறுகிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டாம், தேசிய கீதம் பாடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு தான் அவருடைய செயல்பாடுகளும் போக்கும் அங்கு இருந்தது.
இதில் இன்னும் ஒன்று பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர் கூர்ந்து கவனிக்க வேண்டும். இதுவரைக்கும் இருந்த ஆளுநர்களுக்கு இல்லாத வண்ணம், இந்த ஆளுநர் வந்த பிறகு, கோட்டை கொத்தள வாசலில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை தந்து, டிரம் வாசிக்கப்பட்டு அங்கு தேசிய கீதம் இசைக்கப்பட்டு காவல்துறையின் டிஜிபி, தலைமைச் செயலாளர், பேரவை செயலாளர், பேரவை தலைவர் என அனைவரும் நின்று அங்கு தேசிய கீதம் வாசிக்கப்பட்டு பின்பு தான், மரபு ரீதியாக சிவப்பு கம்பளம் கொண்டு வரவேற்கப்படுகிறார்.
வாசலில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு, தேசிய கீதம் வாசிக்கப்பட்டு பின்பு உள்ளே வந்த பிறகு, ஒரு சில நிமிடங்களிலே திரும்பவும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று வலியுறுத்தி அதை ஏற்றுக் கொள்ளாத போது அவர் வெளியேறுகின்ற அந்த போக்கு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.”
``திமுக முன்கூட்டியே அறிந்து கொண்டார்களா ஆளுநர் வெளியேறப் போகிறார் என்று?”
``ஒருவேளை அவர்கள் முன்கூட்டியே தெரிந்து கொண்டு இருக்கலாம். என்னை பொறுத்த வரையில், கவர்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையில் மிகுந்த சிரித்த முகத்துடன் காணப்படுகிறார். பேரவை தலைவர் மற்றும் பேரவை செயலாளர் அவர்களிடம் பூங்கொத்து மற்றும் புத்தகங்கள் பெற்றுக்கொள்கிறார். அந்த நேரடி ஒளிபரப்பை பார்க்கும் பொழுது அவர் சாதாரணமாக வருவது போல தான் வந்தார். உள்ளே வந்த போது, `தமிழ் தாய் வாழ்த்து தான் பாடுவோம் என்று சொன்னேன். துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது என்று சொல்லி இன்றைக்கு ஐந்து துணை வேந்தர்களை நியமிக்காமல் இருக்கிறீர்கள். பாஜக வந்த பிறகு தமிழ்நாட்டில் துணைவேந்தர் பதவிக்கு தகுதி வாய்ந்தவர்கள் இருந்த போதும் அவர்கள் யாருமே தகுதியற்றவர்கள் என்று சிந்தித்து வேறு மாநிலங்களில் இருந்து துணை வேந்தர்களை தமிழகத்தில் நியமிக்கும் அநியாயம் அக்கிரமங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்படி செய்து கொண்டிருக்கின்ற நீங்கள், வேந்தராக இருக்கக்கூடிய அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒரு பாலியல் வல்லுறவு நடக்கிறது என்றால் காவல்துறை பொறுப்பேற்க வேண்டுமோ, தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டுமா, அதற்கு நிகரான பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கு இருக்கிறது அல்லவா. அதை குறித்து தான் நான் முழக்கங்களை எழுப்பினேன்.
ஒரு கட்டத்தில் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு, அவருடைய இருக்கைக்கு அருகில் போய் நின்று கொண்டு, `தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டும். அதுதான் எங்களுடைய மரபு. தமிழர்களுடைய மரபு’ என்று சொல்லும் பொழுது அவருடைய கண்கள் சிவந்தது, கன்னங்கள் எல்லாம் துடித்தது. நான் முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருக்கும் பொழுதே காங்கிரஸ் உறுப்பினர்களும் அவருடைய முழக்கங்களை தெரிவித்துக் கொண்டு ஆளுநர் அருகே வந்து கொண்டிருந்தார்கள்.
இந்த கலவரத்திற்கு இடையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் சட்டைக்குள் வைத்திருந்த யார் அந்த சார்? என்கிற பேட்ச் அணிந்து பலகை எல்லாம் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார்கள். நானும் காங்கிரஸ் உறுப்பினர்களும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக்கூடாது என்று ஆங்கிலத்தில் கூறிக் கொண்டிருந்த ஆளுநரை எதிர்த்து முழக்கம் போட்ட பிறகு அவர் கோபப்பட்டு வீறிட்டு இறங்கி ஓடி சென்று விட்டார்.
``எல்லா மாநிலங்களும் அப்படி தான் இருக்கிறது என்று சொல்கிறாரே?”
``எல்லா மாநிலங்களிலும் அப்படி இல்லை. இதுகுறித்து ஏற்கனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்த பொழுது தேசிய கீதம் பாடுவது என்பது கட்டாயம் இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. தேசியக்கொடியை அவமதித்தாலோ, தேசிய சின்னங்களை அவமதித்தாலோ, அதற்கு மூன்று ஆண்டு தண்டனை விதிக்கப்படும் என்பதுதான் சட்டம் சொல்கிறது. அதனால் இவர் கூறுவது முழுவதும் முற்றிலும் தவறான கூற்று. ஒரு நிமிடம் கூட ஆர்எஸ்எஸ் RN ரவி அவர்கள் தமிழக ஆளுநராக இருப்பதற்கு தகுதியற்ற மனிதராகத்தான் அவரை நான் பார்க்கிறேன்.”
``நீங்கள் முழக்கம் போட்டது திமுக சொல்லி தான் செய்தீர்களா அல்லது உங்கள் கட்சியின் மூலமாக செய்தீர்களா?”
``என்னிடம் முழக்கம் போடுங்கள் எதிர்த்து பேசுங்கள் கவர்னருக்கு எதிராக பதாகைகள் பிடியுங்கள் அப்படி என்று திமுகவோ அல்லது எந்த ஒரு கூட்டணி கட்சிகளோ சொல்லும் அளவிற்கு ஒரு புரிதலற்ற எடுப்பார் கைப்பிள்ளை ஆக இருக்கக்கூடியவன் அல்ல வேல்முருகன். நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் சொல்லக்கூடாது, ஆனாலும் சொல்கிறேன். நான் பேரவை உள்ளே வருவதற்கு முன்பாக திமுகவோடு கூட்டணி கட்சியை இருக்கக்கூடிய சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு ஒரு உத்தரவு வந்திருக்கிறது. அரசு தரப்பில் இருந்து. அந்த உத்தரவில், ஆளுநர் வருகிறார் ஆளுநரை எதிர்த்து நீங்கள் யாரும் முழக்கம் போடக்கூடாது. ஆளுநரை எதிர்த்து நீங்கள் யாரும் பேசக்கூடாது. ஆளுநர் வந்து உரை வாசித்து செல்கின்ற வரையில் உங்கள் இருக்கையில் இருந்து நீங்கள் நகர கூடாது என்று அரசு தரப்பில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாம் ஏதாவது சொன்னால், அவர் நம்முடைய சாதனைகள் அடங்கிய ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்று விடுவார், என்று திமுகவிற்கு உள்ளுணர்வு ஏற்பட்டதன் விளைவாக, ஆளுநர் வருகிறார் அவர் முன் ஏதும் பிரச்னை செய்யக்கூடாது என்று உத்தரவு வந்திருக்கலாம். குறிப்பாக வேல் முருகனுக்கு சொல்லுங்கள் வேல்முருகன் தான் பிரச்சினை பெருசாக செய்வார் என்று தகவல்கள் பரிமாற்றப்பட்டுள்ளன. இது நான் பிரச்சனை செய்த பிறகு இது என் காதுக்கு வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் தமிழக அரசு ஆளுநருடன் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு சில முயற்சிகளை எடுத்து இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளன.” என்கிறார்
முழுமையான பேட்டியை காண...