கத்தார் கவிஞர் முகம்மது அல் அஜாமி! கவிதைதான் குற்றம் - 11
நாடு: கத்தார்! உலகின் தனிநபர் பணக்கார நாடுகளில் ஒன்று. மக்கள் தொகை 2.2 மில்லியன்; ஆனால் குடிமக்கள் (citizens) 250,000 பேர் மட்டுமே! தோராயமாக 8 க்கு ஒருவர் மட்டுமே குடிமகன்/ குடிமகள்! இவர்களில் பாதிப் பேர் பெண்கள்; அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட (குறைவான) உரிமைகள்தான். மொத்த மக்கள்தொகையில், கால்வாசிக்கும் அதிகமானவர்கள் (25%க்கு மேல்) குழந்தைகளும் முதியவர்களும்.
“பெரும்பான்மையே ஆளும்’’ (Majority rules) எனும் வரலாற்றுக் கணக்கு பொய்த்திருக்கும் நிதர்சனமாக, இந் நாடு மிகச் சிறிய சிறுபான்மையினரால் எதிர்ப்பின்றி, வலிமையுடன் ஆளப்படுகிறது. நாட்டில் 90% க்கும் மேற்பட்ட அரசு, தனியார் வேலைகள் - அதி முக்கிய பணிகள் - நீதிபதி பணிகள் உட்பட- குடியுரிமை, பிற உரிமைகள் ஏதும் இல்லாத – எப்போது வேண்டுமானாலும் நாடு கடத்தப்பட அல்லது வெளியேற்றப்படும் நிலையில் உள்ள - பிற நாடுகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்களால் நிறைவேற்றப்படுகின்றன.
2011-ல் அரபு நாடுகளில் தொடங்கிய அரசியல், சமூக அமைதியின்மை அலைகள் குறிப்பிட்ட நாடுகளில் வலுப்பெறச் செய்வதற்காக, ஆங்காங்கு செல்வாக்கு மிக்க அரசியல் குழுக்களுக்கு இந்நாடு நிதியதவி செய்ததோ என்ற சந்தேகங்களால், அதன் அண்டை நாடுகளுடன் முள்ளுறை உறவுதான். மத்திய கிழக்குப்பகுதியில் மிகப் பெரிய அமெரிக்க இராணுவ தளத்தைக் கொண்டுள்ள நாடு இது. இந்நாட்டு இராணுவம் 2011 இல் லிபியாவிலும், பின்னர் யேமனிலும் பிராந்தியத் தலையீடுகளில் பங்கெடுத்துள்ளது.
சூன் 8, 2004 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் 150 சட்ட உறுப்புகள் (Articles) கொண்ட (20 பக்கங்களில் அடங்கக்கூடிய ‘சுருக்’) நிரந்தர அரசியலமைப்புச் சட்டத்தின்படி, “ஒரு சுதந்திர, இறையாண்மை கொண்ட அரபு நாடு; நாட்டின் மதம், இஸ்லாம்; ஷரியா சட்டம் நாட்டின் சட்டங்களுக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும்; நாட்டின் அரசியல் அமைப்பு ஜனநாயகமானது; அரபு மொழியே அதன் ஆட்சி மொழி; மக்கள் அரபு தேசத்தின் ஒரு பகுதி” எனப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நாடாகும். (அரசியல் அமைப்பு ஜனநாயகமானது எனக் கூறப்பட்டாலும், அரசின் ஆட்சி 1850 முதல் ஒன்பது தலைமுறைகளாக அல் தானியின் குடும்பத்திலும், ஹமாத் பின் கலீஃபா பின் ஹமாத் பின் அப்துல்லா பின் ஜாசிமின் ஆண் சந்ததியினரின் வம்சாவளியிலும் பரம்பரையாக உள்ளதாகும் (அ.ச.பிரிவு 10).
காலம்: அரேபிய வசந்த காலம். (2010-2012)
குற்றம்: கவிதை தான்! ஆம், கவிதைதான் குற்றம்!
சாற்றப்பட்ட குற்றச்சாட்டு (குறு வடிவம்) : 1. ஆட்சியாளர், எமீரைக் கவிதையால் அவமானப்படுத்தியது. 2. கவிதை மூலம் ஆட்சிமுறையைத் தூக்கியெறிய மக்களைத் தூண்டியது.
குற்றம் சாட்டப்பட்டவர்: எகிப்தில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு இலக்கியம் படித்துவந்த மாணவர். 1975இல் பிறந்த முஹம்மது அல்-அஜாமி (Mohammed al-Ajami, முஹம்மது இபின் அல்-தீப் "Mohammed Ibn al-Dheeb என்றும் அறியப்பட்டுள்ள) கவிஞர்.
எடுக்கப்பட்ட நடவடிக்கை: கவிஞர் முகம்மது அல்-அஜாமி 16 நவம்பர் 2011இல் கைது; பாலைவனத் தோஹா சிறையில், வாசிக்கப் புத்தகங்கள், தொலைக்காட்சி (தாள், பேனா போன்ற) எழுது பொருட்கள் இல்லாத மிகச்சிறிய தனிமை அறையில் அடைத்து வைப்பு.
வழங்கப்பட்ட தண்டனை: (குற்ற எண் 2க்கு) மரண தண்டனை வரையும் வழங்கப்படலாம், (மிகுந்த கருணையோடு!) ஆயுள் தண்டனை முதலில் வழங்கப்பட்டு (நவம்பர் 29, 2012), பிப்ரவரி 25, 2013 இல், தோஹாவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது தண்டனையை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைத்தது. தலைமை நீதிமன்றம் (கசேஷன் நீதிமன்றம்) அக்டோபர் 20, 2013 இல் இதனை ஏற்றுக்கொண்டு - தண்டனையை 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையாகக் குறைத்ததை- உறுதி செய்தது.
நடைமுறைகள்: முழு(!) நீதிமன்ற விசாரணையையும் பரம ரகசியமாக நடைபெற்றது. எப்பேற்பட்ட விசாரணை!
மொத்தம் ஆறு அமர்வுகள். ஐந்து அமர்வுகள் நீதிபதியாலேயே ஒத்திவைக்கப்பட்டன! நடைபெற்ற / ஒத்திவைக்கப்பட்ட நீதிமன்ற விசாரணை அமர்வுகளில் கவிஞர் முகம்மது அல்-அஜாமி ஒருமுறை மட்டுமே கலந்து கொள்ளத் தனிமைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டார்; வழக்கிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள நீதிமன்றத்தில் வாதிட அவர் அனுமதிக்கப்படவில்லை; அவரது வழக்குரைஞருக்கும் நீதிமன்றத்தில் முழுமையாக, வெளிப்படையான, திறந்த நீதிமன்றத்தில் வாதிட அனுமதியில்லை; தன் தரப்பு வாதங்களை முன்கூட்டியே எழுதித் தருமாறு வற்புறுத்ததப்பட்டார்.
நீதிமன்றத்தின் முன், ‘’குற்றமெனச் சொல்லப்படும் இந்தக் கவிதை ஒரு தனிப்பட்ட நண்பர் குழுவில் பகிர்ந்துகொள்ளப்பட்டது; இதுவரையிலும் பொதுவெளியில் அச்சிடப்பட்டோ, வாய்க்கூற்றாகவோ பகிரப்படவேயில்லை. ஆதலால், எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. எனவே, தனது கட்சிக்காரரைப் பாதுகாக்க வேண்டும்; இரகசிய விசாரணையாக இல்லாமல் வெளிப்படையாகத் திறந்த நீதிமன்றத்தில் (Open Court) வழக்கு நடத்தப்பட வேண்டும் என்று வழக்குரைஞர் நீதிபதியிடம் கூறியதற்கு, அவர் நீதிபதியால் சைகையாலேயே (வாயை மூடிக்கொள்ளும்படி) தடுத்து நிறுத்தப்பட்டார்; இவ்வளவுக்கும் அல்-அஜாமியின் வழக்குரைஞர் டாக்டர் நஜீப் அல்-நௌமி, அந்நாட்டின் முன்னாள் நீதித்துறை அமைச்சராக (Justice Minister) இருந்தவர்! ஆதிக்க, அமெரிக்க வல்லாண்மையால் சட்டத்துக்குப் புறம்பான வகையில் துன்புறுத்தப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்ட, ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேனுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழக்குரைஞராகப் பணிசெய்த அரபு நாட்டுச் சட்டங்கள் பற்றிய அறிஞர்.
சாட்சிகள்: அரசாங்கத்தின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகங்களில் பணியாற்றும் மூன்று ‘”கவிதை வல்லுநர்கள்”(!?) சாட்சியங்களை மட்டும் நீதிமன்றம் கேட்டது. அவர்கள் கிளிப்பிள்ளைபோல், “அல்-அஜாமியின் கவிதை, நாட்டின் எமீரையும் அவரது மகனையும் அவமதிப்பதாக உள்ளது” என ( மண்டபத்தில் எழுதிக்கொடுத்த?) ஏகமனதான கருத்தை, ‘அட்சரம் பிசகாமல்’ சாட்சியமாக அளித்தனர்.
வேறென்ன வேண்டும்?
குறிப்பிட்ட கவிதையைத் தான் எழுதியதாக அல்-அஜாமி ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால், “எமீர் "ஒரு நல்ல மனிதர்". அவரை அவமானப்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லவே இல்லை” என்று அல்-அஜாமி கூறியது - பாலையில் காய்ந்த நிலா- நீதிபதியின் இறுகமூடிய செவிகளுக்குள் நுழையவேயில்லை. தோஹா நீதிமன்றத்தில் 29 நவம்பர் 2012இல் இரத்தினச் சுருக்கமாக, அரபு மொழியில் வழங்கப்பட்டது தீர்ப்பு.
"குற்றம் சாட்டப்பட்டவரான மொஹமட் ரஷீத் ஹசன் அல்-அஜாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது" என்று மட்டும் அந்த ‘அரபு நீதிக் குறள்’ தீர்ப்பு கூறியது. (தீர்ப்பு வழங்கிய நீதிபதி, கத்தார் நாட்டுக் குடிமகன் அல்ல; எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படும் நிலைக் குடியுரிமையற்ற அயலவர்!)
தீர்ப்பு வழங்கப்பட்ட நாளில்கூடக் குற்றம் சாட்டப்பட்ட முகமது அஜாமி நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படவேயில்லை. தீர்ப்பு வழங்கப்படும் நாள் குறித்த தகவலும் அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இன்ன குற்றத்திற்காக இந்தத்தண்டணை வழங்கப்படுகிறது என்று வெளிப்படையாகக் காரணங்கள் தீர்ப்பில் குறிப்பிடப்படும் வழக்கம் அந்நாட்டில் இல்லை போலும்!
ஆனால், கவிஞர் 2011இல் கைது செய்யப்பட்ட போதும், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோதும், நீதிமன்ற விசாரணையின்போது அரசு வழக்குரைஞர்,(அனுமதிக்கப்பட்ட அளவு) முன்வைத்த வாதங்கள் அறிக்கைகள், சாட்சி விசாரணைகளின் கோணம் போன்ற நடைபெற்ற நிகழ்வுகளைக் நினைவுக்கோர்வை செய்து யூகம் செய்தால் புலப்படுவது:
அல்-அஜாமி தனது “கெய்ரோ பாடல்” (Cairo Song, 2010), "துனீசிய மல்லிகை" (Tunisian Jasmine, 2011) என்ற இரு கவிதைகளில் ‘சுதந்திரம்’, ‘கொடுங்கோன்மை’ மற்றும் ‘மக்கள் உரிமைகள்’ பற்றி ஆவேசமாக முழங்கியுள்ளார். ”ஆட்சிச் சிம்மாசனத்தில் இன்றிருப்பவரன்றி நாளை வேறொருவர் அமரலாம்” என்று புரட்சிக்கான விதை தூவுகிறார். (இந்த வகைச் சொற்களெல்லாம் ஆட்சி அதிகாரத்தில் திளைப்போர்க்குக் -, குறிப்பாக, அரபுப் பிரதேசங்களில் சர்வ அதிகாரஞ் சூடிக்கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, அதிலுங் குறிப்பாகப் பரம்பரை அதிகார பீடங்களுக்கு - ‘வேம்பனைய,வேண்டாச் சொல்’ அல்லவா? )
மேலும், அக்கவிதைகள், மத்திய கிழக்கு முழுவதும் மலர்ந்துவரும் அரபு வசந்த கிளர்ச்சிகளை - மக்கள் எழுச்சிகளை மனதாரப் பாராட்டுகிறது; “அடக்குமுறைகள் நிகழ்ந்துவரும் நாடுகள் யாவுமே துனிசியாதான், அதாவது மக்கள் எழுச்சிக்குப் - புரட்சிக்கு- உரிய களங்கள்தான்” என்று சூசகமாக எழுச்சிக்கான விழிப்புணர்வை விதைக்கிறது. ‘எந்த விதிவிலக்கும் இல்லாமல் அரபு அதிகாரங்கள் அனைத்துமே ‘கண்மூடித்தனமான திருடர்கள்’ தான், திருடர்கள்’ தான் என்று தீப்பந்தம் கொளுத்திக் காட்டுகிறது.
· கத்தார், ஒரு சர்வாதிகார நடைமுறை கொண்ட முழுமையான முடியாட்சியாகும். ‘கவிதைக் குற்றம்’ நிகழ்ந்த காலத்தில் வழி, வழி எட்டாவது தலைமுறை எமீராக ஷேக் ஹமாத் பின் காலிஃபா அல் தானி (Sheikh Hamad bin Khalifa Al Thani ) 1995 ஆண்டுவரை இளவரசர் ஹமாத் பின் கலிஃபா அல்-தானியாக இருந்தார். அவரது தந்தை எமீர் கலிஃபா பின் ஹமாத் அல்-தானி சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், நாட்டில் இரத்தச் சேதம் ஏற்படுத்தாமல் கத்தார் ஆட்சியைக் கைப்பற்றித் ‘தானே எமிர்’ என அறிவித்துக்கொண்டு அரியணையிலமர்ந்தவர்.
· ஷேக் காலிஃபா அல் தானி,கத்தார் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகளில் இளங்கலை பட்டமும், இங்கிலாந்தில், சாண்ட்ஹர்ஸ்ட் இராணுவ அகாடமியில் இராணுவ அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். இஸ்லாமியக் கொள்கைகள், நடைமுறைகள், விழுமியங்கள் பற்றிய ஆழமான புரிதலையும் இராணுவ மூலோபாயம் மற்றும் தலைமைத்துவத்தில் உறுதியான அடித்தளமுங்கொண்ட ஒரு விரிவான, கலவையான, கல்விப் பின்னணியைக் கொண்டிருந்தவர்.
· சிம்மாசனத்திலமர்ந்த ஷேக் ஹமாத் சும்மா இருக்கவில்லை., நாட்டின் வளங்களைக் குறிப்பாக, இயற்கை எரிவாயு வயல்களை துரிதகதியில் மேம்படுத்தினார். ஆட்சிப்பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்ட அடுத்த ஆண்டிலேயே, 1996-ல், கத்தார், முதல்முறையாக எல்.என்.ஜி ஏற்றுமதியைத் தொடங்கியது. சேர்ந்த செல்வத்தைத் திறம்பட நிர்வகித்து, விரைந்து வளரும் முதலீடுகளாக்கி, ‘விறுவிறு’ வளர்ச்சியைக் கத்தார் அடையச்செய்தார்.
· நடுநிலையோடு மதிப்பீடு செய்வதென்றால் (முந்தைய) ஷேக் காலிஃபா அல் தானி பிற அரபு நாடுகளின் ஆட்சியாளர்களை விடக் கத்தார் நாட்டைப் பலவழிகளில் – பாதுகாப்பு, பொருளாதாரம், உட்கட்டமைப்பு, புதிய தொழில் நுட்பம், விளையாட்டு முதலிய பல்வேறு துறைகளில் - மேம்பாடு அடையச் செய்தவர். கத்தாரின் பான்-அரபு செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனலான அல்-ஜசீராவைநிறுவி, உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் கத்தாரின் வாய்ப்புகளை வளர்ச்சிகளை வெளிப்படுத்தச் செய்து, அதன்மூலம் நாட்டுக்குப் பெருமளவு பன்னாட்டு முதலீடுகளைக் கொண்டுவந்தார். தனிமனித வருமானம் உச்சத்தைநோக்கி உயரச் செய்தார். ஆனால், மனித உரிமைக்களத்தில் கத்தார் இருட்சூழலில் இருப்பதே நிதர்சனம் என்பதும். அவரது பங்களிப்பே.
· பரம்பரை பரம்பரையாக ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள் பெரும்பாலும்- பாரம்பரியமாக- இறக்கும் வரை அரியணையில் இருப்பார்கள்; எளிதில் அதிகாரத்தைக் கைவிடமாட்டார்கள். ஆனால், 1995 முதல் கோலோச்சி வந்த ஷேக் காலிஃபா அல் தானி, தனது 61 வயதில்- ஜூன் 2013 இல்- எரிவாயு வளம் நிறைந்து செல்வங் கொழிக்கும் வளைகுடா நாட்டின் அரசுப் பொறுப்பைத் தன்விருப்பில் துறந்தார். இங்கிலாந்து நாட்டில் உயர்கல்வி பயின்ற,’ ‘மேற்கத்திய முற்போக்கு முக பிம்பம்’ வளர்த்திருந்த ஷேக் காலிஃபா அல் தானி தானே பதவியைத் துறந்தது வளைகுடா அரசியலில் அதிர்வலைகள் பிறக்கச் செய்தது.
· பரம்பரை முறையில் பொறுப்புக்குவர உரிய அவரது மூத்தமகன் அரசப் பொறுப்பை விரும்பாததால் விலகிக்கொள்ள, அவரது இரண்டாவது மகன் ஷேக்தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim bin Hamad Al Thani ) 2013 முதல் ஒன்பதாவது தலைமுறை எமீராகக் கத்தார் ஆட்சியிலுள்ளார்.
· கத்தார் சட்டங்களின்படி, அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் போன்ற கூட்டுச் செயல்பாட்டு அமைப்புகள் எதனையும் நாட்டில் நிறுவ அனுமதிப்பதில்லை. இந்நிலையில், மக்கள், எழுச்சிக்கும், அரசியல் மீட்சிக்கும் கவிதை விதை தூவும் அல்-அஜாமி மீது ஏவப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், அனைத்து அரபு மக்களும், அதிலுங் குறிப்பாக கத்தார் நாட்டு மக்கள் அனைவரும் கவனத்தில் இருத்திக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்க வேண்டுமன, கத்தார் நாடாளும் அதிகார வர்க்கம் கருதியதாக அறியப்படுகிறது.
இதையும் படிக்க: பாடல் வரிகளால் வந்த வினை... கவிஞர் எல் - பெஹைரி! கவிதைதான் குற்றம் - 9
குற்றமெனக் கருதப்படும் இரு கவிதைகள் பற்றிச் சற்று அறிந்துகொண்டு மேற்செல்வோமா?
‘அரேபிய வசந்தம்’ என்று அரசியல் பார்வையாளர்களால் வர்ணிக்கப்படும் ‘அரபு நாடுகளின் மக்கள் எழுச்சி’ துனிஸியாவில் உருவாகி, (2010) எகிப்தில் மையங்கொண்டிருந்த காலத்தில் (2010-2011) முஹம்மது அல்-அஜாமி எகிப்து நாட்டில், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். திருமணமானவர், நான்கு குழந்தைகளுக்குத் தந்தை(அச்சமயத்தில்). கெய்ரோ நகரில் தான் தங்கியிருந்த அபார்ட்மெண்டில், ஆகஸ்ட் 24, 2010இல் சுமார் ஏழு பேர் கொண்ட குழுவில் - அதில் மூவர்தான் கவிஞருக்கு நேரடி நண்பர்கள் - எகிப்து மக்கள் எழுச்சி குறித்து, ஒரு கவிதையை ('கெய்ரோ கவிதை' எனப் பின்னாட்களில் அக்கவிதை பெயர் பெற்றது) வாசித்தார்.
‘கத்தார் எமீரை விமர்சித்து அவமானப்படுத்தியதாக’ அந்நாட்டின் அதிகாரத் தூசுப்படைகளால் குற்றம் ஏற்றப்பட்டுள்ள இந்தக் கவிதை, அங்கிருந்ந ஏழுபேரில் ஒரு கவிஞர், அல்-அஜாமிக்கு முன்னால் அக்குழுவில் வாசித்த கவிதைக்குச் சாதாரணமான எதிர்வினையாக - எந்தவிதமான முன்கூட்டிய திட்டமிடலும் இல்லாமல் - கவிஞர் அல் - அஜாமியால் எழுதி வாசிக்கப்பட்டதுதான். அக் கவிதை இவ்வளவு தாராளமாகப் பெயர் பெறும்; தனக்கு ஏராளமாக இடரும் போராட்ட வாழ்வுந் தரப்போகிறது என்று அல்- அஜாமி கவிதை வாசித்த நாளில் நினைத்துப் பார்த்திருக்கவே மாட்டார். தனது அபார்ட்மெண்டில் ஏழுபேருக்கு மட்டும் வாசிக்கப்பட்ட அக்கவிதை, அரபு மண்டலந்தாண்டி, அகில உலகும் அறியும் நிலை பெறும் என்பதையும் யூகித்திருக்கமாட்டார். மூன்று நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்து வந்திருந்த அவர்களது நான்கு சகாக்களும் கலந்து கொண்ட அந்நிகழ்வில், தனக்கு முன் ஒருவர் பாடிய கவிதைக்கு உடனடி எதிர் வினையாக - அவசரத்தில் – அல்-அஜாமி எழுதி வாசித்த அந்தக்கவிதைக்குக் கவிஞர் தலைப்பிடவேயில்லை.’கெய்ரோ பாடல்’ எனச் சாசுவதமாகி விட்ட அந்தத் தலைப்பு அகிலமே தந்தது!
அடுத்து (2011) மலர்ந்த அல்-அஜாமியின் மற்றொரு கவிதையான "துனீஸிய மல்லிகை"யும் இணையத்தில் பரவி எங்கும் மணம் வீசியது. அக்கவிதை துனிசியாவில் எழுச்சிக்கான ஆதரவை வெளிப்படுத்துவதாகவும், அனைத்து அரபு ஆட்சிகளையும் விதிவிலக்கில்லாமல் விமர்சிப்பதாகவும் இருந்தது உண்மை. ஆனால் தனது நாடான கத்தார் நாடு பற்றிக் குறிப்பிட்டு எதுவும் அக்கவிதையில் எழுதப்படவில்லை என்பதும் உண்மைதான். (இருந்தாலும் அக் கவிதையுங் குற்றமானது!)
துனீசியாவில்-
“மக்களின் குருதியால் ஒரு புரட்சி மூண்டது” ….
"அடக்குமுறையை எதிர்கொண்டுள்ள
நாம் அனைவரும் துனிசியா"
என்று புரட்சி இன்னும் நடக்காத நாடுகளிலும், உறங்கும் மக்களை விழிப்படையச்செய்ய உரத்த குரலாக அல்- அஜாமியின் கவிதை பிராந்திய மக்கள் ஒற்றுமைக்கான அழைப்பைப் பிரகடனப்படுத்தியது;
“தன்னை (மட்டுமே) பிரியப்படுத்திக்கொண்டு,
(மக்களுக்கு) ஒன்றும் செய்யாதவன்
தன் சொந்த மக்களையே
துன்புறுத்துபவன்தான்;
அவனுக்கு அறியத் தாருங்கள்
நாளை... அந்த அந்த சிம்மாசனத்தில்
வேறொருவர் வீற்றிருப்பார்.”
எனத், தனது மகிழ்ச்சியே பிரதானம்; மக்களைப் பற்றி என்ன கவலை? என மமதைப் போக்கில் மிதக்கும் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புச் செய்கிறது கவிதை.
மேலும், வழிவழியாக, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 10ன்படி, நிரந்தரமாக முடியாட்சி தொடர வகை செய்யப்பட்டுள்ள கத்தார் நாட்டில், அரச விசுவாசிகளுக்கு-நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும்,
“தேசம் அவனுடையது அல்ல,
அவரது பிள்ளைகளின் சொத்தும் இல்லை.
அது மக்களுக்குச் சொந்தமானது,
அதன் பெருமைகள் மக்களின் பெருமைகள்”
என்ற சுடுவரிகள், 1850 முதல் ஒன்பதாவது தலைமுறையாகத் தானி குடும்பம் தொடர்ந்து ஆண்டுவரும் தமது நாட்டைத்தான் சு(ட்)டுகிறது என்று கருதுவதற்கு வாய்ப்புகளை வழங்குகிறதல்லவா கவிதை?
மக்கள் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்
‘’அரபு ஆட்சிகளும்
அவற்றை ஆள்பவர்களும்...
எல்லாம்..
விதிவிலக்கில்லாமல்-
ஒரு விதிவிலக்கும் இல்லாமல்,
வெட்கக்கேடு...
திருடர்கள், திருடர்கள்.’’
என அழியா முத்திரை குத்திச் சகட்டுமேனிக்குச் சாடுகிறது சொற்சாட்டை வீசி! (இவ்வரிகள், கத்தார் ஆட்சிக்கும், ஆளும் எமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அலி தானிக்கும் எந்த விதிவிலக்கும் அளிக்க வில்லைதானே?)
‘கெய்ரோ கவிதை’யை அல்-அஜாமி தனது அபார்ட்மென்டில் உணர்ச்சிகரமாக வாசிக்கும்போது அங்கிருந்த ஏழு பேரில் ஒருவரால் அது பதிவு செய்யப்பட்டு, அல் -அஜாமிக்குத் தெரியாமலேயே யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு, இணையத்தில் தீப்பரவலானது. உள்ளார்ந்து பொங்கும் ஆவேசத்துடன் அல் -அஜாமி முழங்கும் அந்த வீடியோ, எகிப்து கடந்து, அவரது சொந்த நாடான கத்தாரிலும் பலரது கவனத்தை ஈர்த்து, குறிப்பாக அந்நாட்டின் ‘ராஜ விசுவாச’ப் பாதுகாப்புப் படை அதிகாரிகளின் கவனத்தையும் எட்டியுள்ளது.
உடனே திட்டமிட்டு வலை விரித்தார்கள். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பவர் வேறெங்கும் தப்பியோடிவிடக் கூடாதல்லவா?. ‘ஊருக்கு வந்தால், தம் அலுவலகம் வந்து சந்திக்குமாறு - சந்தேகம் அளிக்காதவாறு’ - தகவலொன்றை அல்-அஜாமிக்கு அனுப்பிவைத்துப் பாதுகாப்புப் படை அணியினர் காத்திருந்தனர். தனக்கு வலை விரிக்கப்பட்டிருக்கும் சூதறியார் இலக்கியம் படித்து மானுட நேய மனவிரிவு வளர்த்துக்கொண்டிருந்த கவிஞர் அல்-அஜாமி! உறுமீன் வரக் காத்திருக்கும் கொக்குபோலக் காத்திருந்தது எமீர் விசுவாச அதிகாரம்.
பதினாறு மாதங்கள் கழித்து அல்-அஜாமி கெய்ரோவிலிருந்து, தோஹோ (கத்தார்) திரும்பியதும், முன்பே தனக்குக் கிடைத்திருந்த தகவலுக்கேற்பத் - தனது கவிதை வாசிப்பு யூடியூப் வீடியோவாக வலம் வந்து அக்கவிதை குறித்துத்தான் தன்னை அழைத்துள்ளார்கள் என்பதை சற்றும் அறியாமல் - தனது மனைவி, குழந்தைகளைக்கூடப் பார்ப்பதற்கு முன் – விமான நிலையத்திலிருந்து அரச பாதுகாப்புப் படை அலுவலகம் சென்றார் கவிஞர். அலுவலகம் வந்த அல் -அஜாமியை- வலைக்குள் தானே வந்த வரால்மீனாக - அன்று, அங்கேயே (16 நவம்பர் 2011) - கைது செய்து தோஹாவின் பாலைவனச்சிறையில்- தனிமைச் சிறையில் அடைத்தனர், படையினர்.
அதன்பின், மூன்று மாதங்களுக்குப் பின்னரே ஒரேயொருமுறைதான் அவரது குடும்பத்தவர்கள் அல்-அஜாமியைக் காணவே முடிந்தது. ஆறுமாதங்கள் கழிந்து தான் அல்-அஜாமி என்ன காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் அவருக்கே தெரியப்படுத்தப்பட்டது. “கத்தார் தண்டனைச் சட்டத்தின் 134 வது பிரிவின் கீழ், எமிர் தனது அரச உரிமைகளைச் செயல்படுத்துவதற்கும், அதிகாரிகளைப் பொதுவான அதிகார வழிமுறைகளில் பயன்படுத்துவதையும் சவாலுக்குள்ளாக்கி, (அதன்மூலம்) எமிரை விமர்சித்து, அவமானப்படுத்தியதற்காகவும்; பிரிவு 136ன்கீழ் "நாட்டின் ஆட்சியை தூக்கியெறியப் பொது வெளிகளில் மக்களைத் தூண்டியதற்காகவும்’’ என இரு முதன்மைக் குற்றங்கள் அவர்மீது ஏற்றப்பட்டிருப்பது அரச அதிகாரிகளால் அல்-அஜாமிக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், கெய்ரோவில் தனது அபார்ட்மெண்டில், தன் நண்பர்கள், அவர்களது நண்பர்கள் என ஏழு பேரிடையே, தனிப்பட்ட முறையில் அல்-அஜாமி வாசித்த ‘கெய்ரோ கவிதை’யைப் பொது இடத்திலும், பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் வாசித்ததாகப் பொய்யானதொரு ஒப்புதல் வாக்குமூலத்தில் – சிறையில் அதீத வன்முறை பிரயோகித்து, வற்புறுத்திக் - கையெழுத்திட வைக்கப்பட்டார், கவிஞர்.
பென் இன்டர்நேஷனல் மற்றும் பென் அமெரிக்கன் சென்டர் ஆகியவற்றின் பிரதிநிதிகளாக - இரண்டு அமெரிக்கப் பெண் வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் - ஜோன் லீடம்-ஆக்கர்மன் - முகமது அல்-அஜாமியின் விடுதலைக்காக இலவசமாக வாதிட தோஹாவுக்குத் தன்னார்வமாக வந்தனர். ஆனால் அவர்களது விமானம் தரையிறங்கிய நேரத்தில், மேல் முறையீட்டில் தோஹா தலைமை நீதிமன்றம் ஏற்கெனவே முன்னர் (2012இல்) விதித்திருந்த ஆயுள் தண்டனையைக் குறைத்து, 15 ஆண்டு சிறைத்தண்டனையாக பிப்ரவரி 2013 இல் உறுதி செய்திருந்தது. ஆகவே, அனைத்து நீதிமன்ற மேல்முறையீட்டு வழிகளும் தீர்ந்துவிட்டன. அல்-அஜாமிக்குத் தற்போது இருக்கும் ஒரே வழி எமீரின் மன்னிப்புதான் (Royal Pardon) என்று ராஜ்ய வழிகளை நன்கு அறிந்தவர்கள் கூறினார்கள். இருப்பினும் வழக்கு தொடர்பாக தோஹா மத்திய சிறைச்சாலையில் கவிஞர் அல்-அஜாமியைச் சந்தித்து நேரடியாக அவரிடம் ஆலோசிக்க விரும்பி அந்த இரு வழக்குரைஞர்களும் முயன்றது குறித்து நவம்பர் 1, 2013 இல் இருவரும் இணைந்து ஒரு கட்டுரை வரைந்துள்ளதன் ஒரு பகுதி அங்குள்ள சிறை / கள நிலவரங்களை, அரச அதிகாரிகளின் மனப்போக்கை வெளிச்சமிட்டுக் காட்டுவதாக உள்ளது.
“இதோ, “தோஹா மத்திய சிறைச்சாலை, பரந்து கிடக்கும் பாலைப் பரப்பின் மேல்... விரிந்து மிதக்கும் வானமே பாலைவனம்போல் -மேகங்களற்று, வறண்ட வெண்மையாக.... இறுதி தெரியாது நீண்டுகொண்டே போகும் மின்சார வயர்கள் ஊடுருவிச் செல்லும்... (அபூர்வமாகப்) பாறைகள் ஆங்காங்கே மண்டியிட்டு உறங்கும் ஒட்டகங்கள்போலக் கிடக்கும் வறண்டதொரு நிலப்பரப்பின் அடிவானத்தில் எழுந்து நின்றது. இரண்டு கவிதைகளுக்காக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கத்தார் கவிஞர் முஹம்மது அல்-அஜாமியை சந்திக்கத் தோஹா வருமுன்பே நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய கத்தார் அட்டர்னி ஜெனரல் அலுவலக அதிகாரிகளால், சிறைவளாகத்தில் கவிஞர் அல்-அஜாமியைச் சந்திக்க அனுமதி தந்துள்ளதாக எங்களிடம் உறுதி கூறப்பட்டிருந்தது. சிறை வளாகம் சென்று, ஐந்து மணி நேரம் நாங்கள் நின்று, நடந்து, உடைந்த நாற்காலிகளில் அமர்ந்து, அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துடன் மொபைல் போன்களில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களுக்கு வாய்மொழியாகச் சொல்லப்பட்ட அனுமதி மீண்டும் எங்களிடம் உறுதிப்படுத்தப்பட்டாலும், கவிஞர் அல்-அஜாமியைச் தோஹா சிறையில் சந்திக்க எங்களுக்கான அனுமதி குறித்த அதிகாரநிலைச் செய்தி உரியநிலைச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படவேயில்லை.
நாங்கள் காத்திருந்த நேரத்திற்குள் காவலர்கள் இரண்டு முறை பணி மாறினர். கத்தாரில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்களைப் போலவே இச்சிறைக்காவலர்களும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.. காத்திருந்த எங்களிடம் அவர்கள் நட்பாகத்தான் நடந்துகொண்டனர்.
நேரம் கடந்து செல்லச் செல்ல எங்கள் மேல் பரிதாபப்பட்டு, பாலை வறட்சியால் வாயுலர்ந்து போகாமலிருக்க உதவியாகத் தங்களிடமிருந்த ஆரஞ்சுப் பழங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டனர், ஆனால் எங்களைக் கவிஞருடன் சந்திக்கவைத்து உதவிட எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லையே! அல்-அஜாமி நாங்கள் அங்கு வந்திருப்பதை எவ்வாறோ அறிந்து, ஆர்வமாக எங்களைப் பார்க்க விரும்பினார் எனத் தகவல் கிடைத்தது. இவ்வளவு தூரம் யாரும் தன்னைப் பார்க்க வந்ததில்லை என்றும் குடும்பத்தினரிடம் பின்னர் அவர் கூறியதாகச் சொன்னார்கள்.
ஆனால் அவ்வளவு காத்திருந்தும் இறுதியில் எங்களுக்கு அல்-அஜாமியைக் காண அனுமதி கிடைக்கவேயில்லை சிறை அதிகாரிகளுக்கு உரிய தகவல் தராமல், எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பலநூறு மைல்கள் கடந்து வந்து பலமணிநேரங் காத்திருந்தும் , பாலைவனச் சிறைப்பட்டிருந்த கவிஞரைச் சந்திக்காமலே ஏமாற்றமுடன் திரும்பினோம்.” என்றெழுதியுள் ளார்கள். மேலும், “கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனிமைச் சிறையில், பார்வையாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலுடன்தான் முஹம்மது அல்-அஜாமி அடைக்கப்பட்டுள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: அதிகாரத்திற்கு அடங்காத போராளி கவிஞர் ஹபீப் ஜாலிப்! கவிதைதான் குற்றம்- 10
பஹ்ரைனில் உள்ள மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான அமெரிக்கர்கள், சர்வதேச மன்னிப்புச் சபை, ஆங்கில PEN, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான வளைகுடா மையம், PEN இன்டர்நேஷனல், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் அலுவலகம், கருத்து சுதந்திரம் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், கலாச்சார உரிமைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அல்-அஜாமியை உடனே விடுதலை செய்யுமாறு கத்தார் அரசை, எமீர் ஷேக் அல்-தானியை தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
அரபுப் பிராந்தியத்தில் கத்தாரை ஒரு தலைவராக மேற்கத்திய நாடுகள் பார்த்துவருகின்றன. கத்தாரின் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47, "சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப" கருத்துகளுக்கு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், மனித உரிமைகள் தொடர்பான அரபு சாசனத்திற்கு (Arab Charter) கத்தார் ஒப்புதலளித்துக் கையெழுத்திட்டுள்ளது. அதன்படியும் தளைகளற்ற கருத்து சுதந்திரத்தை மதிக்க நாடு உறுதியளித்துள்ளது. ஆனால், அங்கு ஒரு கவிஞர், ஆளும் தலைவரின் (எமீரின்) கண்ணியத்தைக் காயப்படுத்திய (Les Majeste) குற்றத்திற்கு எனச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தி, ‘கருத்து சுதந்திரத்தில் கத்தாரின் இரட்டை நிலைப்பாடு’ இது எனப் பரவலான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அரசின் பிரதம சொலிசிட்டர் ஜெனரல் அரசத் தரப்புத் தொலைக்காட்சியில், ஒரு நேர்காணலில் தோன்றி, கவிஞர் அல் -அஜாமி மீதான குற்றச்சாட்டுகள் ‘கருத்து / பேச்சு சுதந்திரம்’ பற்றியவை அல்ல;, கவிஞர் பகிரங்கமாக எமீரைப், புண்படுத்தியதால்தான், மக்களைத் தூண்டியதால்தான் குற்றங்கள் அவர்மேல் சாய்ந்தன. அதுபோக, அரசாங்கத்தைத் தூக்கியெறியவும் அவர் கவிதையில் வெளிப்படையாகவே வலியுறுத்தியுள்ளார்.’ என்று விளக்கம் கூறியிருந்தார்.
சர்வதேசத் தொடர் வற்புறுத்தல்களின் விளைவாகவும், உலக அரங்கில் தனது முற்போக்குப் (பொய்த்) தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், கால்பந்து விளையாட்டு ஆர்வலரான முந்தைய ஷேக் (தன் தந்தை) முயற்சியால், கத்தாரில் 2022ல் உலகக் கால்பந்துப் போட்டியை நடத்த வாய்ப்புக் கிடைத்திருப்பதால், தனது பெருந்தன்மைப் பிம்பத்தை உருவாக்கும் நோக்கிலும், தற்போதைய எமீர், மார்ச் 15, 2016 அன்று கவிஞர் அல்-அஜாமிக்கு மன்னிப்பு (Royal Pardon) வழங்கினார்.
இதன்மூலம் "சகிப்புத்தன்மை மற்றும் பொறுத்தருள்வது என்பன கத்தார் ஆட்சியாளர்களின் உண்மையான பண்பு நலன்கள்" என்ற செய்தியைப் பிராந்தியத்தின் இளைய ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். அரச மன்னிப்பு அறிவிக்கப்பட்ட அதே நாளில் கவிஞர் அல்-அஜாமி நடைமுறைத் தாமதங்களேதுமின்றி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
"அல்-அஜாமியின் கவிதைகள் ஒப்பனைகளில்லாமல், கவிஞரது மனசாட்சிப்படி வைத்திருக்கும் உறுதியான நம்பிக்கைகளின் அமைதியான வெளிப்பாடாக இருக்கும் நிலையில், அதற்காக அவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுஞ் சிறையில் கழிக்க வேண்டியிருந்தது என்பது மிகவும் அவலமானது, அபத்தமானது" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷலைச் சேர்ந்த ஜேம்ஸ் லிஞ்ச் கூறியிருப்பது உண்மையன்றோ?
‘அல்-அஜாமிக்கு சிறைவாசத்திலிருந்து மன்னிப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது; கவிதைக் குற்ற வழக்கு ‘நீக்கறவு’ செய்யப்படவில்லை’ என்று நிலவும் ஒரு கருத்து ‘தலைக்கு மேற் தொங்கும் கத்திபோல்’ கவிஞர் அல்-அஜாமிக்கு ஒரு முடியாட்சியில் (ஆனாலும், ஜனநாயகப் பெயர்ப் பூச்சு!) நிலவும் ஆபத்துணர்த்துவதாக உள்ளது. அதே சமயம், சுருக்கமான ‘அரச மன்னிப்பு அறிவிப்பு’ எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்பது ஆறுதல்.
எதுவானாலும் சரி, கவிஞர் முஹம்மது அல்-அஜாமி 2016 முதல் சுதந்திரப் பறவை! கவிதை வானளக்கலாம்! ஆனால், அவரிடமிருந்து புதியன காணோம். ஏனோ?
* * *
[கட்டுரையாளர் - ஆங்கிலப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் எழுதியுள்ளார்] wcciprojectdirector.hre@gmail.com)