Pakisthan: மீண்டும் தாய்நாட்டுக்கு செல்லவிருக்கும் மலாலா! காரணம் இதுதான்!
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சமூகச் செயற்பாட்டாளரான மலாலா யூசஃப்சாய் தன் தாய்நாடான பாகிஸ்தானில் நடத்தப்படும் பெண் கல்வி குறித்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் கல்வியை வளர்க்கும் நோக்கத்தில் இன்றும் நாளையும் (ஜனவரி 11,12) பாகிஸ்தானில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் மலாலா நேரில் வந்து கலந்துகொள்ள இருப்பதாக மலாலா ஃபண்ட் தொண்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.
சமூக நலன் மற்றும் பெண் கல்விக்காக அயராது குரல் கொடுத்து வந்த மலாலாவின் செயல்பாட்டால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் தாலிபன்கள் 2012-ம் ஆண்டு மலாலாவை சுட்டு நாட்டை விட்டு வெளியேற்றினர். அதன் பின்பு மலாலா தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு ஒரு சில முறை மட்டுமே வருகை புரிந்தார்.
"பெண் கல்வியை ஊக்குவிக்கும் முக்கியமான மாநாட்டில் உலகெங்கும் உள்ள முஸ்லீம் தலைவர்களோடு கலந்து கொள்ளவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என மலாலா வெள்ளியன்று தனது 'எக்ஸ்' தள பதிவில் தெரிவித்துள்ளார். அனைத்து பெண்களும் பள்ளி செல்வதற்கான உரிமையை பாதுகாப்பது குறித்தும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான தாலிபன்களின் குற்றங்களுக்கு அவர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும் என்பதுபற்றியும் ஞாயிறன்று மாநாட்டில் பேச உள்ளதாக மலாலா அதில் கூறியுள்ளார்.
"மாநாட்டில் கலந்துகொள்ள தாலிபன் அரசாங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அண்டை நாட்டின் அதிகாரிகளிடம் அழைப்புக்கு உரிய பதிலில்லை" என பாகிஸ்தானின் கல்வி அமைச்சரான காலித் மக்பூல் சித்திக் தெரிவித்தார்.
உலகிலே பெண்கள் பள்ளி மற்றும் பல்கலைக்கழகம் சென்று கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான். 2021-ல் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானில் பல ஒடுக்குமுறையை திணித்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இஸ்லாமிய சட்டம், உரிமைகளை உத்தரவாதமாக தருவதாக தாலிபன் நிர்வாகம் கூறுகிறது. ஆனால், பெண்கள் ஆரம்பப் பள்ளியில் பயில மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் பெண்கள் சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த பணியிடங்களில் பணிபுரியவும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...