15 மேம்பாலங்கள், இருவழி, சாலை விரிவாக்கப்பணிகளுக்கு நிதி ஒப்புதல்: மத்திய அமைச்ச...
Rewind 2024: உலகை திரும்பிப் பார்க்க வைத்த 10 பெண்கள்!
1853-ம் ஆண்டு முதல் 2023 வரையிலான நியூசிலாந்து நாடாளுமன்ற வரலாற்றில், 21 வயதே ஆன முதல் இளம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஹனா-ராஹிட்டி மைபி-கிளார்க். நியூசிலாந்து நாடாளுமன்றத்தை தனது போர் முழக்கத்தால் அதிர வைத்தவர். மாவோரி பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் கொண்டு வரப்பட்ட மசோதாவில் திருத்தம் நடைபெற்றதால் ஆவேசம் அடைந்த ஹனா, பாரம்பரிய பழங்குடியின மக்களின் பாடலை பாடியும் ஹாக்கா என்ற நடனமாடியும் ஆக்ரோஷமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி, சட்ட மசோதா நகலை கிழித்தெறிந்தார். இதன் காரணமாக உலகம் முழுக்க வைரல் ஆனார். அரசியல் ஈடுபாடு மற்றும் மாவோரி பழங்குடியின மக்களுக்காகவும் நியூசிலாந்து ஜனநாயகத்திற்காகவும் குரல் கொடுத்ததற்காக 2024-ம் ஆண்டுக்கான 'ஒன் வேர்ல்ட் யங் பொலிட்டீஷியன்' (one world young politician) என்ற மதிப்பிற்குரிய விருதையும் பெற்றுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த பூஜா சர்மாவுக்கு 28 வயதுதான். ஆனால், இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான உரிமை கோரப்படாத உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்துள்ளார்.1996-ம் ஆண்டு டெல்லியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கடந்த 2022-ம் ஆண்டு அவரது சகோதரர் கொடூரமாக கொல்லப்பட, அவரது இறுதிச்சடங்கை பலருடைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் செய்து முடித்தார் பூஜா. அதன் பிறகு ஒவ்வொரு மனிதனின் முடிவும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, டெல்லியில் இறக்கும் அடையாளம் காணப்படாத உடல்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்று, அந்த உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்து, மரியாதையுடன் தகனம் செய்து வருகிறார். இவருடைய இந்த செயலுக்கு அவரது உறவினர்களும் நண்பர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், நடக்கவிருந்த திருமணம் தடைபட்ட நிலையிலும் பூஜா தொடர்ந்து இந்தப் பணியினை கடந்த மூன்று வருடங்களாக செய்து வருகிறார். 'தி பிரைட் சோல்' (The Bright Soul) என்ற அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் தனது சொந்த செலவிலும், நன்கொடையாக பெறப்படும் தொகைகளிலும் தனது மனிதாபிமான பணியை செய்து வருகிறார்.
லெபனானைச் சேர்ந்த கிறிஸ்டினா ஆஸி ஒரு புகைப்பட பத்திரிகையாளர். தன் நாட்டின் மீது இஸ்ரேல் தொடுத்த போர் குறித்தும் போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் ஆவணப்படம் எடுக்க முயற்சி செய்ய, அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆஸியுடன் இருந்த சக பத்திரிகையாளர் கொல்லப்பட்டார். ஆஸியும் பலத்த காயமடைந்தார். அதனால், அவரது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தப் போர் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட, பத்திரிகையாளர்களின் பாதுகாப்புக்காக போராட ஆரம்பித்தார் கிறிஸ்டினா. இந்த வருடம் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் நிகழ்வின்போது, ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச்சென்றார் கிறிஸ்டினா ஆஸி. இறந்த பத்திரிகையாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவர்களின் பணியை கௌரவிக்கும் விதமாகவும் அமையும் என்பதற்காகவே ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் சென்றதாக தெரிவித்தார். பத்திரிகையாளர்களுக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் இறப்பு நேரிடும் என்ற அச்சமின்றி பணியாற்ற, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அவசியம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் இந்த புகைப்பட பத்திரிகையாளர்.
டவுன் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவர்களின் மீது இந்த சமூகம் கொண்டுள்ள முன்முடிவுகளை மாற்றுவதற்காக மேடிசன் நடித்த ‘என்னால் முடியும் என நினையுங்கள்’ என்ற வீடியோ இந்த ஆண்டு வைரல் ஆனது. 150 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை குவித்ததோடு, அந்த வீடியோ சமூகத்தில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்திற்காக 'கான் லயன்ஸ் விழாவில் மதிப்புமிக்க கோல்டன் லயன் விருதை வென்றது.
நடிகையும் மாடலுமான டெவ்லின், நியூயார்க் பேஷன் வீக்கில் இடம்பெற்றுள்ளார். சிறந்த தொகுப்பாளர், பேச்சு நிகழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு செய்திகளின் நெறியாளர் ஆகியவற்றிற்கான கனடியன் ஸ்கிரீன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட டவுன் சிண்ட்ரோம் கொண்ட முதல் நபர் மேடிசன் தான்.
கடற்கரை ஹெலிகாப்டர் பைலட்டாக தன் கரியரைத் தொடங்கிய சுனிதா வில்லியம்ஸ் 1998-ல் நாசாவில் விண்வெளி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007-ம் ஆண்டு விண்வெளியில் மாரத்தான் ஓடிய முதல் நபர் இவரே. 2024, ஜூன் 5 அன்று போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்குப் புறப்பட்டபோது, அது வெறும் எட்டு நாள் பயணம் என்றே இந்த உலகம் நினைத்திருந்தது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீண்வெளி வீரர் பேரி வில்மோர் பிப்ரவரி 2025 வரை பூமிக்குத் திரும்ப மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், விண்வெளியிலேயே இருந்து சில ஆராய்ச்சிகளை மேற்கொள்வதாக முடிவெடுத்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தை அவரது 'மகிழ்ச்சியான இடம்' என்று கூறியுள்ளார். இதற்கு முன்னரும் விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், தனது இரண்டு பயணங்களின்போதும் மொத்தம் 320 நாள்களுக்கும் மேலாக விண்வெளியில் கழித்துள்ளார்.
காங்கோவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளியான ஆனி, அத்துறையில் நிலவும் பாலியல் சமத்துவமின்மை, பாலின துன்புறுத்தல் மற்றும் குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மிகவும் ஆபத்தான சிறிய சுரங்கங்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாக தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். காங்கோவில் உள்ள பெண் சுரங்கத்தொழிலாளர்களின் தேசிய அமைப்பின் தலைவராக இருக்கிற ஆனி, குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே ஒரே தீர்வு என்பதை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். 2024-ம் வருடம், முவாங்கே பற்றி 'தி கார்டியனில்' வெளிவந்த கட்டுரை 'ஒன் வேர்ல்ட் மீடியா' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. உலகளாவிய பெண் சுரங்கத் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் ஆனி.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த டேக்வாண்டோ பாராலிம்பிக் வீராங்கனை. ஒரு கை இல்லாமல் பிறந்த ஜாகியா குடாடாடி, தனது 11-வயதில் இருந்து ஆட்சியாளர்களுக்கு பயந்துகொண்டு ஒரு ஜிம்மில் ரகசியமாக டேக்வாண்டோ பயிற்சியைத் தொடங்கினார். 20 ஆண்டுகால போரைத் தொடர்ந்து, 2021-ல் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வர, டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஜாகியாவுக்கு மறுக்கப்பட்டது. ஆனால், சர்வதேச பாராலிம்பிக் குழுவின் தலையீடு மற்றும் பிரான்சின் ஆதரவுடன், அவர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி, 2024 பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் அகதிகள் அணிக்காக பதக்கம் வென்று வரலாறு படைத்தார். தாலிபன்கள், ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய பிறகு சர்வதேச விளையாட்டு நிகழ்வில் பங்கேற்ற முதல் ஆப்கானிய விளையாட்டு வீராங்கனை ஜாகியா குடாடாடிதான். 'எனது நாட்டின் பெண்களின் பெயரில், எனது நாட்டின் சிறுமிகளின் குரலாக நான் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற்றேன்' என்கிறார் ஜாகியா.
சூடானைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர். கடந்த வருடம், சூடானில் உள்ள அவருடைய மருத்துவமனைக்கு அருகே குண்டுகள் வீசி தாக்குதல் நடந்தபோதும், தன்னை நம்பி மருத்துவமனையில் இருக்கிறவர்களை கைவிட்டு வெளியேற மறுத்துவிட்டார். அதே நேரம், தன் மருத்துவமனை அருகே ராணுவம் மற்றும் துணை ராணுவ ஆதரவுப் படைகளுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருந்த மோதல்களுக்கு இடையே, துணிவுடன் தன் மருத்துவமனையில் வேலைபார்த்து வந்த தன்னார்வ ஊழியர்களையும் கர்ப்பிணிப் பெண்களையும் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்ற உதவினார். இத்தனை போராட்டாங்களுக்கு மத்தியிலும் மருத்துவமனையில் இருக்கிற பெண்களுக்கு தேவையான மகப்பேறு சிகிச்சை, அறுவை சிகிச்சையும் செய்து வருகிறார். வன்முறை காரணமாக ஏற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையை சரியாக்க, புதிதாகப் பட்டம் பெற்ற சுமார் 20 பெண் மருத்துவர்களுக்கு மகப்பேறு மருத்துவத்தில் பயிற்சியும் அளித்து வருகிறார்.
ஃபிரான்ஸைச் சேர்ந்தவர். கிசெலின் முன்னாள் கணவர், போதைப்பொருள் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, தன் நண்பர்களையும் கிசெலை பாலியல் பலாத்காரம் செய்யும்படி தூண்டியிருக்கிறார். கிசெலை வன்கொடுமை செய்ததை அவர் வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை சட்டப்படி இந்த வழக்கில், கிசெலின் பெயரை வெளிப்படுத்தாமலே இருந்திருக்க முடியும். ஆனால், அவர் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவர் முன்னிலையிலும் தண்டனை பெற வேண்டும் என்பதற்காக, விசாரணையை வெளிப்படையாக நடத்தும்படியும், வீடியோக்களைக் காண்பிக்கும்படியும் கிசெல் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சில ஆண்கள் மட்டுமே குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பாலியல் வன்கொடுமையை இத்துனை மனவுறுதியோடு எதிர்கொண்ட கிசெல், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு தைரிய ரோல் மாடலாக மாறியிருக்கிறார்.
சிரியாவில் உளவியல் நிபுணராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார் சாமியா. பல வருட உள்நாட்டுப்போர், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தது, பிழைத்தவர்களும் பயத்துடனும் மனப்பதற்றத்துடனும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனநலனை ஆற்றுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் சாமியா. வடகிழக்கு சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் சர்வதேச மீட்புக் குழுவால் நடத்தப்படும் மனநல மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் சாமியா, போர் காரணமாக அகதிகளான தனிநபர்களுக்கும், குடும்பமாக அகதிகளானவர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...