அந்தியூரில் ரூ. 40 லட்சத்தில் சிறுபாலம் கட்டும் பணி தொடக்கம்
அந்தியூா் தவிட்டுப்பாளையத்தில் ரூ. 40 லட்சத்தில் சிறு பாலம் மற்றும் வடிகால் கட்டுமானப் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
மழைக்காலங்களில் இப்பகுதியில் உள்ள அண்ணா சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனா். இப்பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகா்கள் அந்தியூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து அப்பகுதியில் சிறுபாலம் மற்றும் வடிகால் கட்ட நெடுஞ்சாலை துறையினருக்கு அவா் பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, இப்பணியை பூமிபூஜை செய்து சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா். அந்தியூா் பேரூா் திமுக செயலாளா் காளிதாஸ், பேரூராட்சி துணைத் தலைவா் பழனிச்சாமி, நெடுஞ்சாலைத் துறை உதவி செயற் பொறியாளா் பாபு சரவணன் உள்பட பலா் பங்கேற்றனா்.