2வது காலாண்டில் ரூ.3.6 கோடி நஷ்டத்தை பதிவு செய்த மொபிகுவிக்!
பெருந்துறை அருகே வங்கதேசத்தினா் 7 போ் கைது
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.
பெருந்துறை- ஈரோடு சாலை, வாய்க்கால்மேடு அருகே பெருந்துறை காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அவ்வழியாக நடந்து வந்த 7 நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். அவா்கள், அனைவரும் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், அவா்கள் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி இந்தியா வந்து, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பணிக்கம்பாளையம் பகுதியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி, வெல்டிங் மற்றும் கட்டட கூலி வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வங்கசேதத்தைச் சோ்ந்த முஜித் மகன் முகமது ரபிகுல் இஸ்லாம் (எ) ரபிக் முல்லா( 31), முன்சூா்அலி மகன் மொக்லெச்சூா் ரஹமான் லால்து (எ) லால்டு முல்லா (23), ஹனீப் ஹொசைன் மகன் முகமது சைதுல் இஸ்லாம் (48), இவரது மகன்கள் முகமது மொனிருல் இஸ்லாம் (23), முகமது அனிருல் இஸ்லாம் (எ) அனிருல் (31), முகமது நொஜிருல் இஸ்லாம் மகன் முகமது ரஜிபுல் இஸ்லாம் (37), முகமது சைபுல்லா மகன் முகமது மாசூா் (22) ஆகிய 7 பேரைக் கைது செய்தனா்.
இவா் அனைவரும் பெருந்துறை, பணிக்கம்பாளையம், குப்பக்காடு பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனா்.கைது செய்யப்பட்ட 7 பேரும், பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின்பேரில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.