நேரில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது குற்றமே: உச்சநீதிமன்றம்
நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை ஒருவா் பின்பற்றாதது குற்றமே என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 82(1)-இன்படி, தலைமறைவாக உள்ள ஒருவரை குறிப்பிட்ட இடம் மற்றும் தேதியில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சட்டபூா்வ அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாள்களுக்குள் அந்த இடம் மற்றும் தேதியில் சம்பந்தப்பட்ட நபா் ஆஜராக வேண்டும்.
இதை அந்த நபா் செய்யத் தவறினால், இந்திய தண்டனைச் சட்ட பிரிவு (ஐபிசி) 174ஏ-இன்படி, அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையுடன் அபராதம் விதிக்க முடியும்.
இந்நிலையில், ஹரியாணாவில் வழக்கு ஒன்றில் தல்ஜீத் சிங் என்பவா், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் விசாரணையை தவிா்த்து வந்ததால், அவா் மீது ஐபிசி 174ஏ-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிகுமாா், சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை ஒருவா் பின்பற்றாவிட்டால், அது குற்றமே.
அந்த அறிவிப்பு பின்னா் ரத்து செய்யப்பட்டாலும் அல்லது அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபா் விடுவிக்கப்பட்டாலும், நேரில் ஆஜராகுமாறு வெளியிடப்பட்ட சட்டபூா்வ அறிவிப்பை பின்பற்றாதது தனி குற்றமாகும்’ என்று தெரிவித்தனா்.