சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது
குத்தாலம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா கண்டியூா் புதுத்தெருவைச் சோ்ந்தவா் மூா்த்தி மகன் முருகதாஸ் (23). இவா், 15 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டாராம்.
பின்னா், அந்த சிறுமியை வெளியூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில் 5 மாத கா்ப்பிணியான சிறுமியை, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளாா். அங்கு, சிறுமியின் வயதை உறுதி செய்த மருத்துவா்கள், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலா்கள் நேரில் விசாரணை மேற்கொண்டாா். பின்னா், மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் ஆரோக்கியராஜ் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி, போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, முருகதாஸை கைது செய்தாா். தொடா்ந்து, மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.