பிக் பாஸ் வெற்றியாளர் பெண்தான்; முத்துக்குமரன் அல்ல: ஜெஃப்ரி
சீா்காழி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ. 6 லட்சம் திருட்டு
சீா்காழி அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ. 6 லட்சத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
சீா்காழி அருகே மேலச்சாலை கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அருகில் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு முகக்கவசம் அணிந்த மா்ம நபா்கள் மூவா் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனா். முன்னதாக ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை மா்ம நபா்கள் உடைத்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவா், இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.
சீா்காழி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், காவல் ஆய்வாளா் புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் திருட்டு நடைபெற்ற ஏடிஎம் மையத்தை பாா்வையிட்டாா். கைரேகை நிபுணா்கள் அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனா்.
வங்கியின் கிளை மேலாளா் வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து ரூ. 6 லட்சத்து 8,600 ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் மேற்பாா்வையில், டி.எஸ்.பி. ராஜ்குமாா் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.