சல்மான் கான் வீட்டில் பொருத்தப்படும் குண்டு துளைக்காத கண்ணாடிகள்!
நடிகர் சல்மான் கான் வீட்டில் பாதுகாப்புக் காரணங்களுக்காக குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்தாண்டு ஏப்ரல் 14 அன்று இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த அக்டோபர் மாதம், சல்மான் கான் மீதான பிஷ்னோய் கும்பலின் கொலை முயற்சியைக் கைவிட ரூ. 5 கோடி பணம் கேட்டு மும்பை போக்குவரத்து காவல்துறையினருக்கு வாட்ஸ்ஆப் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையும் படிக்க | சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் சல்மான் கானை கொல்லும் சதித்திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 5 பேர் அளித்த வாக்குமூலத்தில், அவரைக் கொல்வதற்காக தலா ரூ. 25 லட்சம் அளிக்கப்பட்டதாகவும், பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த சுமார் 70 பேர் 24 மணி நேரமும் சல்மான் கானை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சல்மான்கானுக்கு மத்திய அரசின் சார்பில் ஒய்-ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
ஆனால், கடந்த டிசம்பர் 5,2024 அன்று சல்மான் கானை மீண்டும் அச்சுறுத்தும் வகையில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அன்றைய தினம், மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் சல்மான் கானின் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்தப் படப்பிடிப்பைக் காண வந்த நபர், பாதுகாப்பு அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.
அந்தத் தகராறில் அவர் லாரன்ஸ் பிஷ்னோய் பெயரைக் கூறி கத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அங்கு வந்து அந்த நபரைக் கைது செய்தனர்.
இதையும் படிக்க | மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் அல்லு அர்ஜுன் நலம் விசாரிப்பு!
தொடர்ச்சியாக இவ்வாறு நடைபெறும் அச்சுறுத்தல் சம்பவங்களால் நடிகர் சல்மான் கான் தனது வீட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பால்கனி பகுதியில் குண்டு துளைக்காத கண்ணாடிகளைப் பொருத்துவதாகக் கூறப்படுகிறது.