சுற்றுலா விமானம் கடலில் விழுந்து விபத்து! 3 பேர் பலி!
ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் 3 வெளிநாட்டினர் பலியாகினர்.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் ரோட்நெஸ்ட் எனும் சுற்றுலாத் தீவு ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிறிய ரக விமானங்களின் மூலமாக பயணம் செய்வார்கள்.
இந்நிலையில், நேற்று (ஜன.07) மதியம் அம்மாநில தலைநகர் பெர்த்துக்கு திரும்புவதற்காக புறப்பட்ட செஸ்னா 208 கேரவன் எனும் சிறிய ரக கடல் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அதை இயக்கிய உள்ளூர் விமானி மற்றும் அதில் பயணம் செய்த 2 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.
அந்த மூவரில் 65 வயதுடைய சுவிஸர்லாந்து பெண் ஒருவரும், 60 வயது டென்மார்க் ஆணும் மற்றும் 34 வயதுடைய உள்ளூர் விமானியும் பலியானது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க:டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?
இந்த விபத்தின்போது, அவர்களோடு அந்த விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரேலிய நாட்டினர் 2 பேர் மற்றும் பலியான பெண்ணின் கணவரும், பலியான ஆணின் மனைவியும் உயிர் பிழைத்துள்ளனர். இருப்பினும், அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அம்மாநில தலைநகர் பெர்த்திலுள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
கடலினுள் விழுந்த விமானத்தின் பாகங்களை மீட்கும் பணி தற்போது நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களது உடல்களை காவல் துறை நீச்சல் வீரர்கள் 26 அடி ஆழத்திற்கு நீந்தி சென்று மீட்டனர்.
இந்த விபத்து குறித்து சிறப்பு புலணாய்வு அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கான காரணம் தற்போது வரையில் தெரியாத நிலையில் புறப்படும்போது பாறையில் மோதி விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.