ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!
ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கிய சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்குத் தொடர்ந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து சமீபத்தில் பாஜக நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. தடையை மீறிப் போராட்டம் நடத்தியதால் பாஜகவினர் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
அதேநேரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து சென்னை உள்பட அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக நடத்திய போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இதையும் படிக்க | குடியரசு நாளன்று கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு!
இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடுத்துள்ளது.
சென்னை காவல் ஆணையர் அரசியலமைப்பை மீறும் வகையில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளது.
இதேபோல தங்கள் கட்சி போராட்டத்துக்கு அனுமதி வழங்காதது குறித்து பாமகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
முன்னதாக, ஆளுங்கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? மற்ற கட்சிகளுக்கு அனுமதி இல்லையா? என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.