Avtar Group : இந்தியாவில் 'பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள்' பட்டியல் - சென்னை, கோவைக்கு எந்த இடம்?
அவதார் குழுமம் '2024-ம் ஆண்டிற்கான இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்' பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியல் வெளியீட்டை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து வருகிறது அவதார் நிறுவனம்.
இந்த ஆய்வின் முடிவுகள் பெண்களுக்கான பணியிட பாதுகாப்பு, பெண்களின் வாழ்வாதாரம், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம், நகரங்கள் குறித்த பெண்களின் மதிப்பீடு ஆகியவற்றை கொண்டு வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் 120 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அவதார் நிறுவனத்தின் முடிவுகளில் பெங்களூரு, சென்னை, மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, அகமதாபாத், டெல்லி, குருகிராம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் டாப் 10 இடங்களை பிடித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களான சென்னை இரண்டாவது இடத்தையும், கோயம்புத்தூர் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆய்வு முடிவுகளின் சென்னை முதல் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2024-ம் ஆண்டிற்கான பட்டியலில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 8 நகரங்கள் டாப் 25 இடங்களைப் பிடித்துள்ளது.
இந்த முடிவுகள் குறித்து அவதார் குழுமத்தின் தலைவர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ், “நகரங்கள் வாய்ப்புகளுக்கான அடிப்படையாக விளங்குகின்றன. பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள், வளர்கிறார்கள் என்பதை நகரங்களே வடிவமைக்கின்றன. எனவே பெண்களை முன்னேற்றுவதற்கு நமது நகரங்களில் அடிப்படை கலாச்சார கொள்கைகள் பற்றி நமக்கு தெளிவான புரிதல் இருக்க வேண்டும். அவதார் வெளியிடும் வருடாந்திர குறியீடு ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ பட்டியல் துல்லியமான தரவு மற்றும் ஆதாரங்கள் கொண்டு கணக்கிடப்படுகின்றன.
2047-ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சி ‘விக்சித் பாரத்’ என்னும் திட்டத்தின் கனவை நனவாக்க, ஆண்களுக்கு இணையாக வெற்றி பெறும் பெண் வல்லுநர்கள் தேவை. எனவே நகரங்களில் பெண்களுக்கான பலத்தை மேம்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான சாலைகள், எளிதில் கிடைக்க கூடிய கல்வி மற்றும் சுகாதாரம், குறைந்த செலவில் பெண்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்குவது உள்ளிட்ட அனைத்தும் பெண்களுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். மேலும் பெண்கள் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்தும் சூழலை உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.