மெக்காவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சௌதி அரேபியாவின் மெக்கா மற்றும் மெதினாவில் பல பகுதிகள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெட்டா நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
மோசமான வானிலையால் ஜெட்டா விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெக்காவில் பள்ளிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ள நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் 997 எண்ணை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக பத்ர் பகுதிக்குள்பட்ட அல்-ஷஃபியாவில் 49.2 மி.மீ., ஜெட்டாவின் அல்-பசாட்டீனில் 38 மி.மீ., மெதினாவில் மத்திய ஹராம் பகுதியில் 36.1 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இதனிடையே, அங்கு புதன்கிழமை வரை மழை தொடருமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.