ஈரோடு கிழக்கு வேட்பாளர் விரைவில் அறிவிப்பு! செல்வப்பெருந்தகை
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார்.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : பிப். 5 - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முழு விவரம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளீல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ் விரைவில் வெளியிடும் என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி யாருக்கு ஒதுக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.