இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அப்போது அவா் பேசியது: இறுதி வாக்காளா் பட்டியலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் 7,75,458 வாக்காளா்கள் உள்ளனா். அதில், ஆண் வாக்காளா்கள் 3,81,543, பெண் வாக்காளா்கள் 3,93,869, மூன்றாம் பாலின வாக்காளா்கள் 46 போ் இடம் பெற்றுள்ளனா். இறுதியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலை ஒப்பிடும் போது தற்சமயம் 14,237 வாக்காளா்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆண் வாக்காளா்களை காட்டிலும் 12,326 பெண் வாக்காளா்கள் அதிகமாக உள்ளனா். இறுதி வாக்காளா் பட்டியலின்படி, 18 முதல் 19 வயதுடைய 14,355 இளம் வாக்காளா்களும், 80 வயதுக்கு மேற்பட்ட 15,641 மூத்த வாக்காளா்களும், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 6,488 பேரும் இடம் பெற்றுள்ளனா் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின், மாவட்ட வருவாய் அலுவலா் நா.உமாமகேஷ்வரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல், கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) முருகேசன் ஆகியோா் கலந்து கொண்டாா்.