துணை வேந்தர்கள் நியமனத்தில் UGC புதிய விதிமுறைகள்... மத்திய அரசை சாடும் ஸ்டாலின்!
துணை வேந்தர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) புதிய விதிமுறைகள் தொடர்பாக மத்திய அரசை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து, எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின், ``துணை வேந்தர்கள் நியமனங்களில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரத்தை அளிப்பது, கல்வியாளர்கள் அல்லாதவர்களை இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது உள்ளிட்ட UGC-ன் புதிய விதிமுறைகள் கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல்.
மத்திய பா.ஜ.க அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் குறைமதிப்பிற்குட்படுத்தவும் முயல்கிறது. கல்வி என்பது, பா.ஜ.க அரசின் கட்டளைப்படி செயல்படும் ஆளுநர்கள் வசம் இல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில் இருக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன் நாட்டிலேயே முன்னிலையில் இருக்கிறது தமிழ்நாடு. அப்படியிருக்க, நமது நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்பட்டால் அமைதியாக இருக்க மாட்டோம். கல்வி, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் இருக்கிறது. எனவே, UGC இந்த அறிவிப்பை ஒருதலைபட்சமாக வெளியிடுவது அரசியலமைப்புக்கு எதிரானதென்று கருதுகிறோம். இத்தகைய மீறலை ஏற்க முடியாது. சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழ்நாடு இதற்கெதிராகப் போராடும்." என்று பதிவிட்டிருக்கிறார்.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...