லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : `மீண்டும் ஈ.வி.கே.எஸ் குடும்பமா?’ காங்கிரஸ் வேட்பாளர் ரேஸில் யார் யார்?
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வாக இருந்த திருமகன் ஈவேரா காலமானதையடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 14.12.2024 அன்று மறைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாகச் சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது. விரைவில் இடைத்தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தேர்தல் ஆணையர்கள் யானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து ஆகியோர், "ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும். இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடக்கும்" என அறிவித்தனர். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை, தி.மு.கவுடன் ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும். வேட்பாளர் யார் என்பது இதுவரை தேர்வு செய்யப்படவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியை பொருத்தமட்டில், ஏற்கனவே காங்கிரஸ் வசம்தான் உள்ளது" என தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கில் போட்டியிட கத்தர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சத்தியமூர்த்தி பவன் சீனியர்கள், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை களமிறக்குவதற்கு அவரது ஆதரவாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் ஈரோட்டில் நடத்த மாநகர காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், 'ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். முன்னதாக திருமகன் ஈவேரா மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட முதலில் சஞ்சய் சம்பத்திடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஆனால் அவர் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்துதான் இளங்கோவன் நிறுத்தப்பட்டார். இந்த முறை சஞ்சய் சம்பத் போட்டியிட விரும்புகிறார். ஆனால் ஒரே குடும்பத்துக்கு மீண்டும் மீண்டும் சீட் கொடுக்க கூடாது என எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.
அடுத்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர் மக்கள் ராஜன் சீட் பெறுவதற்கு தீவிரமாக முயன்று வருகிறார். இவர் கடந்த சட்டமன்றத் தேர்தல், பிறகு நடந்த இடைத்தேர்தலின் போதும் சீட் கேட்டிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்தமுறை எப்படியும் சீட் வாங்கிவிட வேண்டும் என முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இதேபோல் இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னாளில் அவரிடமிருந்து விலகிய முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவியும் முயன்று வருகிறார்" என்றனர்.
இதேபோல் தி.மு.க தரப்பிலிருந்தும் சீட் பெறுவதற்கு காய் நகர்த்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அறிவாலய புள்ளிகள், "ஏற்கெனவே இரண்டுமுறை காங்கிரஸுக்கு சீட் கொடுத்துவிட்டோம். ஏன் ஒவ்வொரு முறையும் அவர்கள் வெற்றிபெற நாம் செலவு செய்ய வேண்டும் என ஈரோடு உடன்பிறப்புகள் பலரும் கொதிக்கிறார்கள். மேலும் தி.மு.க கொள்கை பரப்பு துணைத் செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சீட் பெறுவதற்கு தீவிரமாக முயன்று வருகிறார்கள். இருவரும் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கூடவே இருவரும் அமைச்சர் முத்துச்சாமியின் தீவிர ஆதரவாளர்கள். ஆனால் இறுதி முடிவை முதல்வர்தான் எடுப்பார். அதற்கு கட்டுப்பட்டு நாங்கள் முழுமையாக பணியாற்றுவோம்" என்றனர்.
எப்படியோ விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிடுவார். அதுவரையில் இரு கட்சிகளுக்குள்ளும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தொடரும்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs