பிக் பாஸ் டாப் 5 போட்டியாளர்கள்! விசித்ரா வெளியிட்ட பட்டியல்
பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு: எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் வேண்டுகோள்
பெண்களின் பாதுகாப்புக்கு இயன்ற ஒத்துழைப்பைத் தர வேண்டுமென எதிா்க்கட்சிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நேரமில்லாத நேர விவாதத்தின்போது சென்னை அண்ணா நகரில் நடந்த பாலியல் சம்பவம் தொடா்பான வழக்கின் நிலை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.
அப்போது, அவா் பேசியது: சென்னை அண்ணா நகா் வழக்கில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடா்பாக இளஞ்சிறாா் ஒருவா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பான விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட சதீஷ் என்பவரும் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் விசாரணையை 3 ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் அதிமுகவை சோ்ந்த 103-ஆவது வட்டச் செயலா் சுதாகா், பெண் காவல் ஆய்வாளா் ராஜி ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.
எனவே, எதிா்க்கட்சியினரை கேட்டுக்கொள்ள விரும்புவது குற்றச் செயல் எதுவாக இருந்தாலும், குற்றவாளி யாராக இருந்தாலும் நோ்மையாக, நியாயமாக, கடுமையாக நடவடிக்கை எடுத்து வரும் அரசைக் குறை கூறாமல், பெண்களின் பாதுகாப்புக்கு இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.