சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையிலுள்ள வனப்பகுதியில் இன்று (ஜன.9) காலை நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் மத்தியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டதாக சத்தீஸ்கர் மாநில துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஜன.6 அன்று பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
அப்போது பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்தியாவிலுள்ள நக்சல்களை முழுமையாக அழித்து விடுவோம் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.9) மாவட்ட ரிசர்வ் காவல் படை, சிறப்பு அதிரடி படை மற்றும் சி.ஆர்.பி.எஃப் இன் கம்மாண்டோ படையினர் இணைந்து நடத்திய இந்த தாக்குதல் நடவடிக்கையில் தற்போது 3 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு (2025) துவங்கியதில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு நடவடிக்கைகளில் மொத்தம் 9 நக்சல்கள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.