யுஜிசி புதிய விதிகளுக்கு எதிரான தீர்மானம்: அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!
ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார், ஆளுநர் பரிந்துரைப்பவரே தேடுதல் குழுவின் தலைவராகவும், யுஜிசி, பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர்களே உறுப்பினர்களாக ஆக முடியும் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிக்க : நெல்லை ரூ. 4,000, மதுரை ரூ. 3,800, கோவை ரூ. 3,500: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்தில்...!
ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்து தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவளித்துள்ளது.