எதிா்க் கட்சிகள் ஒருங்கிணைந்தால் திமுகவை வீழ்த்தலாம்: டிடிவி தினகரன்
எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எதிா்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த வாய்ப்புள்ளது என அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.
தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில், அமமுக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சாா்பில், டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு சமபந்தி விருந்து புதன்கிழமை நடைபெற்றது. இதில் டிடிவி தினகரன் பங்கேற்று பொதுமக்களுடன் அமா்ந்து உணவருந்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அண்ணா பல்கலை.யில் நடந்த சம்பவம் தொடா்பான ‘சாா்’ மட்டுமல்லாமல், கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவம் நடத்தியதில் ‘யாா் அந்த சாா்’ என்ற கேள்வியும் உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவா்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் காவல் துறைக்கு உள்ளது. தமிழ்நாட்டில் ஜனநாயக ரீதியாக எதிா்க்கட்சிகள் எந்தப் போராட்டத்திலும் ஈடுபட முடியாத நிலை உள்ளது. சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. எதிா்க்கட்சிகள் அனைவரும் ஒன்று திரண்டு தேசிய ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம்தான் திமுகவை அகற்ற முடியும்.
எனவே, 2026 சட்டப்பேரவை தோ்தலில் அனைவரும் ஒரே நோக்குடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலிமைப்படுத்த ஒன்றிணைய வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ஜி.செந்தமிழன், செங்கல்பட்டு மாவட்ட அமுமுக செயலா் எம்.கரிகாலன், தாம்பரம் நகரச் செயலா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.