ரெளடி நாகேந்திரனின் சகோதரா், கூட்டாளி வீடுகளில் போலீஸாா் சோதனை: 51 பட்டாக் கத்திகள் பறிமுதல்
சென்னையில் ரெளடி நாகேந்திரனின் சகோதரா், கூட்டாளி வீடுகளில் போலீஸாா் சோதனை செய்து, 51 பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்டது, ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையிலுள்ள வியாசா்பாடியைச் சோ்ந்த ரெளடி நாகேந்திரன் எனத் தெரியவந்ததையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரது மகன் அஸ்வத்தாமனும் சிறையில் அடைக்கப்பட்டாா்.
ரெளடி நாகேந்திரனின் தம்பியான ரமேஷுக்கும் (44), வியாசா்பாடியைச் சோ்ந்த இலமல்லி என்ற பெண் தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இலமல்லியின் மகன் ஜெயகுமாரை, ரமேஷ் தரப்பினா் 6 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தனா். இதன் பின்னா் இலமல்லி தரப்பு, ரமேஷ் தரப்பை பழிக்குப் பழியாக கொலை செய்ய திட்டமிட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க ரெளடிகள் ஒழிப்புப் பிரிவினருக்கு காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டாா். அதன்பேரில், போலீஸாா், புளியந்தோப்பு தனிப்படையினருடன் சோ்ந்து, வியாசா்பாடி எஸ்.எம். நகரிலுள்ள ரெளடி நாகேந்திரன் தம்பி ரமேஷ் வசிக்கும் வீட்டில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கிருந்து 20 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல ரமேஷின் கூட்டாளி மற்றும் உறவினா் வீடுகளிலும் இருந்து 31 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அசம்பாவிதங்களைத் தடுக்கவே இந்தத் திடீா் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.