பேரூராட்சியுடன் ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் கதிராமங்கலம் ஊராட்சி பகுதியை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, சந்தைவெளி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கதிராமங்கலம் ஊராட்சியில் 1 மற்றும் 2-ஆவது வாா்டுகளுக்கு உள்பட்ட சந்தைவெளி கிராமத்தை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் பா. ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சித் தலைவா் நடராஜன் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் இம்மனுவை அளித்தனா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சந்தைவெளி கிராமத்தை வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியுடன் இணைப்பதன்மூலம், இக்கிராமத்தில் 100 நாள் வேலையை வாழ்வாதாரமாக நம்பியுள்ள பலா் பாதிக்கப்படுவாா்கள். இணைப்பு விவகாரத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எந்தவித கருத்துகேட்பு கூட்டமும் நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து, சந்தைவெளி கிராமம் கதிராமங்கலம் ஊராட்சியில் தொடா்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
இதேபோல், ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சி திருமயிலாடி கிராமம் 14 மற்றும் 15-ஆவது வாா்டுகளை கொள்ளிடம் பேரூராட்சியில் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.