Sivakarthikeyan: ``சாதாரணமான ஒருவன் வளர்ச்சியை எட்டும்போது சிலர்தான் வரவேற்கிறார்கள்!'' - எஸ்.கே!
சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இத்திரைப்படத்தில் எஸ்.கேவுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஶ்ரீ லீலா எனப் பலரும் நடிக்கிறார்கள். மற்றொரு பக்கம் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படபிடிப்பும் 90 சதவீதம் முடிந்துவிட்டது. `சிக்கந்தர்' திரைப்படத்தை முடித்துவிட்டு மீண்டும் சிவகார்த்திகேயனின் படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார் முருகதாஸ். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் எஸ்.கே, தான் சினிமாவிலிருந்து விலக நினைத்ததுக் குறித்து பேசியிருந்தார். தற்போது அந்த முடிவு குறித்து விரிவாக `ஹாலிவுட் ரிப்போர்ட்டர்' ஊடகத்தின் இந்தியப் பதிப்பில் பேசியிருக்கிறார்.
அதில் அவர், ``நான் எப்போதும் இந்த சினிமா துறை குறித்து புகார் சொல்லமாட்டேன். நான் இந்த சினிமா துறையில் இருக்க வேண்டும். ஆனால், என்னுடைய அழுத்தம் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாது. அவர்கள் அனைவரும் சாதரணமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய அழுத்தம் என்னுடைய குடும்பத்தை ஏன் பாதிக்க வேண்டும் என தோன்றியது. அதனால் எனக்காக நீங்கள் பொறுத்துக் கொண்டது போதும் என என் குடும்பத்திடம் கூறினேன். அந்த சமயத்தில் என்னுடைய மனைவி `எதுவுமில்லாமல் தொடங்கி இன்று இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள். அஜித் சார், விக்ரம் சாருக்குப் பிறகு வெளியாட்கள் சினிமாவில் பெரியதாக வரவில்லை. நீங்கள் பெரிதாக சாதனை புரிந்திருக்கிறீர்கள்.
நீங்கள் செய்தது சுலபமான விஷயம் அல்ல. எங்களுக்கு மற்ற விஷயங்களெல்லாம் பிரச்னை இல்லை. நீங்கள் அது குறித்து கவலை கொள்ளாதீர்கள்.' என்றார். 20 வருடத்தில் பெரிதாக செய்துவிட்டதாக நான் சொல்லவில்லை. இந்த நிலைமைக்கு வந்திருப்பதைத்தான் நான் அப்படி குறிப்பிடுகிறேன். கடைசி 5 வருடம் எனக்கு மிகவும் கடின காலமாக அமைந்தது. சம்பளம் போன்றவற்றை எண்ணாமல் நம் வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும். ஒரு படம் தோல்வியானால் அதனை சரிப்படுத்திக் கொண்டு மீண்டெழுந்து அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும்.
நான் இந்த வழியைதான் பின்பற்றினேன். சாதாரண ஒருவன் பெரிய வளர்ச்சியை எட்டும்போது இங்கு சிலர்தான் வரவேற்கிறார்கள். ஆனால், சிலருக்கு இந்த விஷயம் பிடிப்பதில்லை. `எதனால் இவன் வருகிறான். இவனிடம் என்ன இருக்கிறது?' என பலக் கேள்விகளை எனக்கு நேராகவே எழுப்பியிருக்கிறார்கள். நான் இப்படியான விஷயங்களை பல முறை சந்தித்திருக்கிறேன். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நான் சிரிப்பை மட்டுமே கொடுத்து கடந்துவிடுவேன். நான் அவர்களுக்கு எந்த பதிலையும் திரும்ப கூறமாட்டேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார் எஸ்.கே.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...