ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டி? நாளை முக்கியக் கூட்டம்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார். பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது,
இதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று(ஜன . 7) அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : பிப். 5 - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முழு விவரம்!
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாளை முக்கியக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.